தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுக்களின் நகல் சசிகலாவிடம் ஒப்படைப்பு


தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுக்களின் நகல் சசிகலாவிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 22 Feb 2017 11:15 PM GMT (Updated: 22 Feb 2017 11:04 PM GMT)

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மைத்ரேயன் எம்.பி. அளித்த புகார் மனுக்களின் நகல்கள் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.

பெங்களூரு,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மைத்ரேயன் எம்.பி. அளித்த புகார் மனுக்களின் நகல்கள் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.

மனுக்களின் நகல்

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வை (ஓ.பன்னீர்செல்வம் அணி) சேர்ந்த மைத்ரேயன் எம்.பி., தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 16-ந் தேதி 2 புகார் மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுக்களின் நகல்களை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு வழங்குமாறு மைத்ரேயனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

சசிகலாவிடம் ஒப்படைப்பு

அதன் அடிப்படையில் அந்த 2 மனுக்களின் நகல்கள் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை மைத்ரேயன் எம்.பி., பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்து சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்து, சசிகலாவிடம் வழங்குமாறு கூறினார். சிறை உதவி சூப்பிரண்டு அந்த மனுக்களின் நகல்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த ஆவணங்கள் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே சிறையில் உள்ள சுதாகரன் நெற்றி மற்றும் கைகளில் திருநீறு பூசிக்கொண்டு இரவில் நீண்ட நேரம் மந்திரங்கள் ஓதி பூஜை செய்வதாகவும், மந்திரவாதியை போன்ற அவருடைய தோற்றத்தை பார்த்து சக கைதிகள் பயப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அவரை வேறு சிறைக்கு மாற்றுமாறு சக கைதிகள் சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Next Story