‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ என்ற பெயரில் ஜெ.தீபா புதிய அமைப்பு தொடக்கம்


‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ என்ற பெயரில் ஜெ.தீபா புதிய அமைப்பு தொடக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2017 12:15 AM GMT (Updated: 24 Feb 2017 7:11 PM GMT)

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார்.

சென்னை, 

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய இல்லத்தின் முன்பு தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டுவந்து, அவரை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.

பேரவை தொடக்கம்

அ.தி.மு.க.வினரின் வேண்டுகோளை ஏற்று, ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய பேரவையை தீபா தொடங்கினார். தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகத்தையும் அவர் திறந்துவைத்தார்.

பேரவையின் பெயர், கொடி, நிர்வாகிகள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை நடந்தது.

அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில், பேரவையின் பெயரை “எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொடி அறிமுகம்

கருப்பு, சிவப்பு நிறங்களுக்கு நடுவே வெள்ளை நிற வட்ட வடிவில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செங்கோலை தாங்கிப்பிடித்து இருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட பேரவையின் கொடியையும் தீபா அறிமுகம் செய்துவைத்தார்.

அப்போது அருகில் அமர்ந்திருந்த அவருடைய கணவர் மாதவன் மற்றும் ஆதரவாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

புதிய பேரவை தொடங்கி, அரசியல் களத்தில் இறங்கிய தீபாவுக்கு அவருடைய ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து கூறினர்.

ஜெயலலிதா சமாதியில் மரியாதை

முன்னதாக ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தன்னுடைய வீட்டில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு தீபா மரியாதை செலுத்தினார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அவருடைய சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் மதுரவாயலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் ‘கேக்’ வெட்டி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடினார். அனைவருக்கும் காலை உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

தன்னுடைய இல்லத்தின் முன்பு கூடியிருந்த அனைவருக்கும் மதியம் அன்னதானம் வழங்கினார். இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

ஜெ.தீபா பேட்டி

பேரவையை தொடங்கிய பின்னர் நிருபர்களுக்கு ஜெ.தீபா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று (நேற்று) புதிய பேரவை ஒன்றை தொடங்கியுள்ளேன். இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுடன் பயணித்து வெற்றியை தேடித்தர வேண்டும்.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நான் இருக்கவேண்டும் என்று கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்துக்கேற்ப, என் பணி இருக்கும்.

உறுதிமொழி

எனது தலைமையை ஏற்கும் அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்களுடன் பயணித்து ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்போம் என்று உறுதிமொழி ஏற்கிறோம். எனக்கு ஆதரவு அளித்துவரும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் எனது பயணத்தை தொடங்கியுள்ளேன்.

வருங்காலங்களில் ஏழை, எளியோரின் துயர் துடைப்பதற்கும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும், விவசாயிகள், பெண்கள் ஆகியோரை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்வதற்காகவும் என்னுடைய பணி தொடரும். ஆசியாவிலேயே தமிழகத்தை முதலாவது மாநிலமாக மாற்றுவதற்கு உறுதி ஏற்கிறோம். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றவும், அவர் விட்டுச்சென்ற பணியை தொடரும் வழியிலும் எனது பணி இருக்கும்.

துரோக கூட்டம்

தற்போது அரசியலில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் துரோக கூட்டத்திடம் இருந்து தமிழக மக்களை காப்பதற்காக என்னுடைய பயணம் தொடரும். என்னை நம்பி வந்தவர்கள் யாரையும் கைவிடமாட்டேன். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கும், நிலையான ஆட்சியை கொண்டுவருவதுடன், ஒளிமயமான எதிர்காலத்தையும் நாங்கள் உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் கட்சியாக

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் ஆரம்பித்த பேரவை அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதா?

பதில்:- மக்கள் பணி ஆற்றுவதற்காகத்தான் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளேன். ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரவைப்பது தான் எங்களுடைய நோக்கமாக இருக்கும்.

கேள்வி:- முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவதாக நீங்கள் கூறியிருந்தீர்களே?

பதில்:- அவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்து பேசினேன். இணைந்து செயல்படுவதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

சிலர் தூண்டுதல்

கேள்வி:- உங்களுடைய சகோதரர் தீபக், அ.தி.மு.க. வுடன் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என்று கூறுகிறாரே?

பதில்:- அவர் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் சிலருடைய தூண்டுதலின் பேரில் தான் இவ்வாறு கூறி வருகிறார்.

கேள்வி:- நீங்கள் தற்போது ஆரம்பித்துள்ள பேரவையில் யாரை நிர்வாகிகளாக நியமித்துள்ளர்கள்?

பதில்:- மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்து எடுக்கப்பட்ட முடிவுபடி நான் பொருளாளராக இருக்கிறேன். (இந்த இயக்கத்துக்கு தலைவர் யார்? என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை)

கேள்வி:- சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளாரே?

பதில்:- நிச்சயமாக அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் எந்த தவறும் செய்திருக்கமாட்டார்.

ஆர்.கே.நகரில் போட்டி?

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?

பதில்:- அதில் போட்டியிடும் எண்ணம் உள்ளது. ஆனால், இதுபோன்ற முக்கியமான முடிவுகள் பின்னர் ஆலோசிக்கப்படும்.

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?

பதில்:- நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

மக்கள் பணி ஆற்றுவேன்

கேள்வி:- பேரவையை தொடங்கியுள்ள நீங்கள், இதற்கு முன்பு மக்கள் பணி என்ன செய்துள்ளர்கள்?

பதில்:- மக்கள் பணி என்பது அவரவர் விருப்பத்திற்கேற்ப கையில் எடுத்துவிட முடியாது. மக்கள் அதை விரும்பமாட்டார்கள். சசிகலா கையில் எடுத்தார். ஆனால், அவர் மக்களுக்காக என்ன செய்தார். ஜெயலலிதாவின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தினார். அவர்களை உங்களால் ஏற்கமுடியும். நான் உண்மையான சிந்தனையுடன் என் வாழ்க்கையை அர்ப்பணித்து மக்கள் பணி ஆற்றுவேன்.

கேள்வி:- இதனை குடும்ப அரசியலாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

பதில்:- இது குடும்ப அரசியல் என்று சொல்லமுடியாது. நாங்களாக முடிவெடுக்கவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப சூழ்நிலை அமைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி செயல்பாடு?

கேள்வி:- சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை உங்களது சகோதரர் தீபக், நானும், என்னுடைய சகோதரி தீபாவும் சேர்ந்து செலுத்துவதாக கூறியுள்ளாரே?

பதில்:- இதன் பின்னால் அரசியல் சூழல் உள்ளது.

கேள்வி:- நீங்கள் பணத்தை செலுத்துவீர்களா?

பதில்:- அதற்கு என்னிடம் இப்போது பதில் இல்லை. இப்போது தான் தீர்ப்பு வந்துள்ளது. தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி:- தற்போது முதல்- அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு பற்றி?

பதில்:- அவர் எந்த செயல்பாட்டையும் நிரூபிக்கவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போது தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்- அமைச்சராக வரமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை விவரம்

கேள்வி:- அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- நான் ஏற்கனவே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விவரங்களை கேட்டிருந்தேன். ஆனால், இதுவரை எனக்கு அளிக்கப்படவில்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

கேள்வி:- தற்போது தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சினையாக எதை கருதுகிறீர்கள்?

பதில்:- பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகிறது. உதாரணமாக, வறட்சி பாதிப்பும், விவசாயிகள் பிரச்சினையும் உள்ளது. சமீபத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சினையும் ஏற்பட்டது.

கேள்வி:- கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று பா.ஜ.க. கூறியுள்ளதே?

பதில்:- அதற்கான சந்தர்ப்பம் இல்லை. திராவிட கட்சிகள் தான் தமிழகத்தில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story