சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மனித ஆற்றலை வளர்க்க வேண்டும் ஜக்கி வாசுதேவ் பேச்சு


சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மனித ஆற்றலை வளர்க்க வேண்டும் ஜக்கி வாசுதேவ் பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2017 10:00 PM GMT (Updated: 24 Feb 2017 9:29 PM GMT)

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மனித ஆற்றலை வளர்க்க வேண்டும் என்று சிலை திறப்பு விழாவில் ஜக்கி வாசுதேவ் பேசினார்.

கோவை,

ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

112 வழிமுறைகள்

மனித குலத்துக்கு ஆதியோகியின் இணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய முகமாக ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 112 அடி உயர இந்த சிலையை செய்ய 8 மாதங்கள் ஆனது. மனிதன் தன் ஆற்றலின் உச்சத்தை அடைய யோக விஞ்ஞானத்தில் உள்ள 112 வழிமுறைகளை பின்பற்றி இந்த முகம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு எளிய யோகா பயிற்சியை 10 லட்சம் பேருக்கு அளித்து, அதன் மூலம் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு கற்றுத்தந்து, அடுத்த மகாசிவராத்திரிக்கு முன்பாக 10 கோடி மக்களுக்கு யோகாவை கொண்டு செல்வது ஆகும். இதுபோல் மக்களுக்கு யோகாவை கொண்டு செல்பவர்கள் யோகா வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

ஆற்றல் வீணாகி வருகிறது

நாம் வாழும் இந்த உலகத்தில் நிலநடுக்கம், வெள்ளம், போன்றவற்றை அறிய முடியாத நிலையில்தான் மனிதன் இருக்கிறான். மனிதனின் ஆற்றல், தற்போது வீணாகிக்கொண்டு வருகிறது. எனவே சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மனிதனின் ஆற்றலை வளர்க்க வேண்டும்.

1500 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலும், யோகாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருந்தது. ஆனால் நாளடைவில் அவை இரண்டும் பிரிந்துவிட்டன. அதிலும் கடந்த 200 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுவிட்டது. தற்போது யோகாவை மீட்டெடுக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

உள்நிலையை உணர்த்துவதுதான் யோகா

உலக யோகா தினத்தையோட்டி இந்தியா முழுவதும் சாலையிலும், பொது இடங்களிலும் யோகா பயிற்சி செய்யப்பட்டது. எனவே மனிதன் யோகாவை கற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. யோகா என்பது உள்நிலையை உணரக் கூடியது ஆகும். யோகா அறிவியலை உரித்தாக்குகிறது. உள்நிலையை உணர்த்துவதுதான் யோகா. வாழ்க்கை என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். யோகாவை மக்கள் செய்யும் நேரம் வந்து விட்டது. யோகாவை அறிவியல் பூர்வமாக உணர்ந்து கொண்டால் அதிக சக்தி உள்ள மனிதனாக வாழலாம். யோகா செய்வதன் மூலம் மனிதன் தனது முழு திறனையும் பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலைநிகழ்ச்சிகள்

விழா முடிந்த பின்னர் கைலாஸ்கர் ராஜஸ்தான் ரூட்ஸ், நிரூத் தரூத்யா நாட்டியக்குழு, உகாண்டா நாட்டை சேர்ந்த ரோக்கீர்ஸ் குழு மற்றும் ஈஷா யோகா மைய குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றது. மைதானத்தின் ஒருபுறம் அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் வெளியூர் களில் இருந்து பொதுமக்கள் பலர் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவருக் கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story