தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் எந்த அடிப்படையில் சொல்கிறார்? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி


தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் எந்த அடிப்படையில் சொல்கிறார்? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
x
தினத்தந்தி 24 Feb 2017 9:45 PM GMT (Updated: 24 Feb 2017 9:36 PM GMT)

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று எந்த அடிப்படையில் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்? என்று கோவையில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

கோவை,

எதிர்ப்பதை கண்டிக்கிறோம்

தமிழக பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவைக்கு பிரதமர் வரக் கூடாது என சில அமைப்பினர் எதிர்ப்பதை கண்டிக்கிறோம். பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் நிகழ்ச்சி என்பதால் பிரதமர் மோடி இங்கு வருகிறார். பெரும்பான்மை மக்கள் என்றவுடன் இது போன்ற எதிர்ப்பு வருகிறது.

பிரதமர், இந்துக்களின் உணர்வுகளுக்கு, இந்து மதத்திற்கு உடந்தையாக இருக்கிறார் என்பதால் பிரதமர் வருவதை காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கிறார்கள். பிரதமர் எதை செய்தாலும் விமர்சனம் செய்வதற்கு சிலர் இருக்கின்றனர்.

500 மதுக்கடைகள்

சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் தமிழகம் வருவதை வரவேற்கிறோம். சட்டமன்றத்தில் தி.மு.க. நடந்து கொண்டது தவறு. ஆனால் விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் என்று மு.க.ஸ்டாலின் எதன் அடிப்படையில் சொல்கிறார்? என்று தெரியவில்லை. சட்டமன்றத்தின் சிறப்பை 2 திராவிட கட்சிகளும் மதிப்பதில்லை.

சட்டமன்றத்தில் சபாநாயகர் சாதி பிரச்சினையை கிளப்பியதும் தவறு. தமிழகத்தில் திராவிட கட்சி களின் கலாசாரம் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு மூட சொன்ன கடைகளை மூட இன்னும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வர தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம். அவர்கள் இந்த விவகாரத்தில் தவறு செய்து இருக்கின்றனர் ஆனால் இப்போது பா.ஜ.க வை குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story