அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி


அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
x
தினத்தந்தி 24 Feb 2017 11:30 PM GMT (Updated: 24 Feb 2017 9:39 PM GMT)

அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்று ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்தார்.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்த பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

உண்மையான அ.தி.மு.க.

கேள்வி: நீங்களும், தீபாவும் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தீர்கள். ஆனால் தீபா உங்களை விட்டு தனியாக பிரிந்து சென்றிருக்கிறாரே?

பதில்:- தீபாவை நாங்கள் என்றைக்கும் வரவேற்க தயாராகவே இருக்கிறோம்.

கேள்வி:- ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தெரிவித்த கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அது அவருடைய கருத்து.

கேள்வி:- நீங்கள் தலைமை ஏற்க வேண்டும், டி.டி.வி.தினகரன் தலைமையை ஏற்க முடியாது என்று தீபக் கூறினாரே?

பதில்:- அவருடைய உள்ளத்தில் உள்ள கருத்தை சொல்லி இருக்கிறார்.

கேள்வி:- சிறப்புமிக்க அறிவிப்பு இருப்பதாக சொன்னீர்கள். அது என்ன?

பதில்:- அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களின் எண்ணப்படி நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை உறுதிப்பட தெரிவிக்கிறேன்.

மக்கள் நீதிமன்றம்

கேள்வி:- ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் வசம் இருக்கிறார்களே?

பதில்:- அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும், 7½ கோடி தமிழ் மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.

கேள்வி:- எதை வைத்து சொல்கிறீர்கள்?

பதில்:- எதிர்காலத்தில் மக்கள் நீதிமன்றத்தில் இது உறுதியாக வெளிப்படும்.

கேள்வி:- பொருளாளர், அவைத்தலைவர் உங்கள் பக்கம் இருக்கிறார்கள். நீங்கள் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டு பொதுச்செயலாளர் பொறுப்பு காலியாக இருந்தால் அடிப்படை உறுப்பினர் அனைவரும் யாருக்கு அதிகமாக வாக்களிக்கிறார்களோ அவர் தான் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க முடியும். அதுவரை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர், அவைத்தலைவர் தான் இப்போதும் இருப்பார்கள். கட்சி விதிகளுக்கு புறம்பாக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரால் நியமிக்கப்பட்டவர்களும் செல்லாது. அவரால் விலக்கப்பட்டவர்களும் செல்லாது.

வங்கி கணக்குகள் முடக்கம்?

கேள்வி:- அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாதவர் டி.டி.வி.தினகரன் என்று சொல்கிறீர்கள். பிறகு எப்படி அவர் துணை பொதுச்செயலாளராக இருக்க முடியும்?

பதில்:- உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ஜெயலலிதா தான் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர். அந்த இடத்தில் உட்காருவதற்கு யாருக்கும் தகுதி இல்லை.

கேள்வி:- அ.தி.மு.க. கணக்குகளை முடக்க நீங்கள் அனுப்பிய கடிதத்தை வங்கி ஏற்றுக்கொண்டதா?

பதில்:- ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள். சட்டப்படி அனைத்தும் நடைபெறும்.

கேள்வி:- கட்சியில் பிளவு ஏற்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

பதில்:- கடல் இரண்டாக பிளப்பது இல்லை.

கேள்வி:- அ.தி.மு.க. தலைமைக்கழகத்தை எப்போது கைப்பற்ற போகிறீர்கள்?

பதில்:- தானாகவே எங்கள் பக்கம் வந்து சேரும்.

ஜெயலலிதா மரணத்துக்கு பதில்

கேள்வி:- ஜெயலலிதாவின் மரணம் பற்றி...?

பதில்:- ஜெயலலிதாவின் மரணம் பற்றிய பல்வேறு சந்தேகங்கள் நாட்டு மக்களின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. அ.தி.மு.க. தொண்டர்களின் இதயத்தில் வடுவாகவே அது இருக்கிறது. இந்த சந்தேகங்களை தீர்க்க தான் நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று நான் சொன்னேன். அதற்கான பூர்வாங்க பணிகளை நான் முதல்-அமைச்சராக இருந்தபோது செய்தேன். தற்போது இருக்கும் அரசுக்கு ஜெயலலிதாவின் மீது உண்மையான அக்கறை இருந்தால் உடனே அவர்கள் நீதி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அதிகார வரம்புக்கு உட்பட்ட விசாரணை கமிஷனை அமைத்தால் தான், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்துக்கு உரிய பதில் கிடைக்கும்.

கேள்வி:- சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி பதில் அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. அது உங்களுக்கு சாதகமாக அமையுமா?

பதில்:- நிச்சயமாக எங்களுக்கு சாதமாக தான் வரும்.

கேள்வி:- ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடத்த காரணம் என்ன?

பதில்:- இது ஜெயலலிதாவின் சொந்த தொகுதி. ஆகவே இந்த இடத்தில் அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம்.

சட்டசபையில் நடந்தது என்ன?

கேள்வி:- பிப்ரவரி 18-ந் தேதி சட்டசபையில் நடந்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- சட்டசபை கூடுவதற்கு முன்பு இருந்தே, அடைக்கப்பட்டு இருந்த எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்கு சென்று வாக்களித்தவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதன் பிறகு சட்டமன்றத்தை கூட்டுங்கள். அப்போது யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ? அவர்களுக்கு வாக்களிக்கட்டும் என்று நாங்கள் பதிவு செய்தோம். ஆனால் சபாநாயகர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதில் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இப்போது அவரவர் தொகுதிக்கு செல்லும் எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்று நாம் கண்கூடாக பார்க்க தான் செய்கிறோம். சபாநாயகர் அன்று எடுத்த முடிவு ஏதோ சிக்கலில் எடுத்த முடிவாக இருக்கும் என்று கருதுகிறோம்.

கேள்வி:- புதிய அரசின் செயல்பாடுகள், அறிவிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டங்களை தான் இந்த அரசு செய்து இருக்கிறது.

கேள்வி:- இந்த அரசு மேலும் 4 ஆண்டுகள் நீடிக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- நிச்சயம் நிலைக்காது.

கேள்வி:- மேலும் எம்.எல்.ஏ.க்கள் உங்கள் பக்கம் வர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- எல்லோருக்கும் பொறுமை தேவை. பொறுத்தால் பூமி ஆள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story