நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆஜர்


நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆஜர்
x
தினத்தந்தி 24 March 2017 11:15 PM GMT (Updated: 24 March 2017 8:09 PM GMT)

நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று ஆஜர் ஆனார்.

சென்னை, 

நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நேற்று ஆஜர் ஆனார். அப்போது அவர் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவர அறிக்கையை தாக்கல் செய்தார்.

எத்தனை வழக்குகள்?

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஒரு ஜாமீன் மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாரித்தார். அப்போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2011-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த ஏராளமான வழக்குகளை புலன் விசாரணை செய்யாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் நிலுவையில் இருப்பதாக நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து 2011-ம் ஆண்டுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்குகளில் எத்தனை வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளது? என்பது குறித்த விவரத்தை சென்னை போலீஸ் கமிஷனர் டிசம்பர் 6-ந்தேதிக்கு முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஆனால், போலீஸ் கமிஷனர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

நீதிபதி உத்தரவு

இந்த வழக்கை 17-ந்தேதி விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அறிக்கை தாக்கல் செய்யாத போலீஸ் கமிஷனர் மார்ச் 20-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

ஆனால், 20-ந்தேதி போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் ஆஜர் ஆகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அரசு வக்கீல் பி.கோவிந்தராஜன், ‘ஐகோர்ட்டு உத்தரவின்படி, வழக்குகளின் விவர அறிக்கை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது’ என்றார்.

கண்டனம்

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘17-ந்தேதி வழக்கு ஆவணங்களை நான் பார்த்தபோது, அறிக்கை அதில் இல்லை. அன்று மாலை அவசர அவசரமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. போலீஸ் கமிஷனர் 27-ந்தேதி நேரில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும்’ என எச்சரித்தார்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் 27-ந்தேதி வெளியூர் செல்ல இருப்பதால், வேறு ஒரு தேதியில் அவரை ஆஜராக உத்தரவிட வேண்டும் என்று நீதிபதியிடம் அரசு வக்கீல் முறையிட்டார்.

ஜார்ஜ் ஆஜர்

இதன்படி, இந்த வழக்கை நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி வைத்தியநாதன் விசாரணைக்கு எடுத்தார். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மதியம் 2 மணிக்கே கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அப்போது, மத்திய குற்றப்பிரிவில் 2011-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கொண்ட அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கோர்ட்டில் நேரில் ஆஜராகி வழக்குகளின் விவர அறிக்கையை தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை அரசு வக்கீல் ராஜரத்தினம், 2011-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த வழக்குகளில், சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்காத வழக்குகளை 6 மாதத்துக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்து உள்ளார்.

தள்ளிவைப்பு

அரசு வக்கீலின் கருத்தை பதிவு செய்து கொள்கிறேன். இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்கு போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை செப்டம்பர் 20-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story