ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் அமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் சவால்


ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் அமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் சவால்
x
தினத்தந்தி 24 March 2017 11:45 PM GMT (Updated: 24 March 2017 8:22 PM GMT)

ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தியதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் என்று அமைச்சர் காமராஜிடம் மு.க.ஸ்டாலின் சவால் விட்டு பேசினார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான இறுதி நாள் விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

‘தினத்தந்தி’ தலையங்கம்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சட்டமன்றத்துக்கு வெளியேயுள்ள எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள், பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்திருந்தன.

‘தினத்தந்தி’ பத்திரிகை வெளியிட்ட தலையங்கத்தில், தமிழக அரசின் நிதி நிலைமை மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என எச்சரிக்கை செய்திருந்தது. இதேபோல், மேலும் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதி இருந்தன.

மக்கள் போராட்டம்

தற்போது, தமிழக அரசின் கடன் 3 லட்சத்து 14 ஆயிரத்து 365 கோடி ரூபாய். இது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். மோசமான நிதிநிலை என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், அமைதி, வளம், வளர்ச்சி, நல்லாட்சி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் இப்போது அமைதி இருப்பதாக தெரியவில்லை. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின்போது வன்முறை, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம், வறட்சியால் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராட்டம், மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொலை, டெல்லியில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை, தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கவே பயப்படும் நிலை, குடிநீர் - பாமாயில் - பருப்பு கேட்டு வீதிக்கே வந்து மக்கள் போராட்டம் என்று தமிழகம் அமைதி குலைந்த மாநிலமாகவே இருக்கிறது.

அமைச்சர் பி.தங்கமணி:- எதிர்க்கட்சி தலைவர் வரிசையாக குற்றச்சாட்டுகளை சொல்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியாக நடந்தது. காளையை காட்சிப் பட்டியலில் சேர்த்தது யார்?. நெடுவாசல் போராட்டத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இங்கே எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். ஆனால், அவர்கள் ஆட்சியில் சட்டக்கல்லூரி மாணவர்களே தாக்கப்பட்டார்களே.

பருப்பு, பாமாயில் தாமதம்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- தமிழக அரசின் சுயமரியாதை தலைமைச் செயலகத்தில் இருக்கிறது. ஆனால், இங்கேயே வருமான வரி சோதனை நடந்துள்ளது. தலைமைச் செயலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரது வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைதி இல்லை. வளர்ச்சி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு ஏற்றம் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

தமிழக அரசின் பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும், இப்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. பெட்ரோல், டீசல் மீது ‘வாட்’ வரியை மாநில அரசே உயர்த்தியுள்ளது. கடந்த பட்ஜெட்டில் கடன் சுமை ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி. இந்த முறை கடன் சுமை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 360 கோடி. கடந்த முறை பட்ஜெட் பற்றாக்குறை ரூ.9 ஆயிரத்து 154 கோடி. இந்த முறை பற்றாக்குறை ரூ.15 ஆயிரத்து 930 கோடி. நிதி வருவாய் குறைந்து கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. நிதி நிர்வாகம் மோசம் அடைந்தால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும். ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பருப்பு, பாமாயில் வாங்க பணம் இல்லாததால் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. பெண்களே வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.

நிரூபிக்க தயார்

அமைச்சர் காமராஜ்:- ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் இல்லாமல் பெண்கள் போராடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். அதில் உண்மை இல்லை. தி.மு.க. தான் போராட்டம் நடத்தியது. பொதுமக்கள் போராடவில்லை. டெண்டர் விடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் தான் பருப்பு, பாமாயில் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது.

அமைச்சர் பி.தங்கமணி:- ‘உதய்’ மின் திட்டத்தில் இணைந்ததால் ஏற்பட்ட கடனை மாநில அரசே ஏற்றதால் கடன் சதவீதம் உயர்ந்துள்ளது. அது ஓராண்டில் 3 சதவீதமாக குறையும். புதிய மின் திட்டங்கள் தொடங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார். 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தியதை ஆதாரத்தோடு நிரூபிக்க நான் தயார். நிரூபித்தால் என்ன செய்வீர்கள்?.

அமைச்சர் காமராஜ்:- தமிழகத்தில் 4½ கோடி பெண்கள் உள்ளனர். இவர்களில் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் எவ்வளவு என்பதை நிரூபிக்க முடியுமா?.

நிறைவேற்றப்பட்டதா?

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- அரசு சார்பில் கொள்கை விளக்க பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கவர்னர் உரைக்கும், பட்ஜெட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கவர்னர் உரையில், ‘லோக் ஆயுக்தா கொண்டு வருவோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்போம். கச்சத்தீவை மீட்போம். பட்டு ஜவுளி பூங்கா புதிதாக அமைப்போம். புதிய குடிநீர் திட்டங்களை கொண்டு வருவோம். புதிதாக கிரானைட், தாதுமணல் கொள்கையை உருவாக்குவோம்’ என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது. இதில் ஏதாவது நிறைவேற்றப்பட்டதா?.

110 விதியின் கீழ் 6 ஆண்டில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 5 ஆண்டுகள் பாழாகிவிட்டது. ஒரு ஆண்டில் ஒன்றும் நடக்கவில்லை. 2017-2018-ம் ஆண்டு பட்ஜெட்டும் அதையே எதிரொலிக்கிறது.

(இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

அமைச்சர் செல்லூர் ராஜூ:- கடந்த 5 ஆண்டில் ஒன்றும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார். அப்படி என்றால், 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்க அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கிறார்களே.

அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன்:- உங்கள் ஆட்சியில் பாலாறு, தேனாறு ஓடினால் நீங்கள் ஏன் எதிர்க்கட்சியாக இங்கு இருக்கிறீர்கள்.

8 குடிநீர் திட்டங்கள்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- நான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. அதை ஒத்துக்கொள்வதாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.

அமைச்சர் துரைக்கண்ணு:- விவசாயிகள் இறப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 82 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- 2006-2011-ம் ஆண்டு காலத்தில் நீங்கள் அறிவித்து விட்டுச்சென்ற 8 குடிநீர் திட்டங்களை நாங்கள் வந்துதான் தொடங்கினோம். அனைத்து திட்டங்களையும் கண்டிப்பாக செயல்படுத்துவோம்.

அமைச்சர் பி.தங்கமணி:- 18 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- முதல்-அமைச்சர் துறைக்கு 8,846 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்?. ‘தொலைநோக்கு திட்டம் 2023’-ன்படி, 11 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு பெற கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இன்றைய நிலவரப்படி, 6.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் இல்லை. எனவே, அது நினைவு திட்டமாக இல்லாமல், கனவு திட்டமாகவே அமைந்துவிடுமோ? என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் விவரம் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக எந்த விவரமும் இல்லை.

விவசாய கடன்

அமைச்சர் செல்லூர் ராஜூ:- எந்தவித அச்சமும் தேவையில்லை. 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு இருக்கிறது. வரும் ஆண்டில் போதுமான அளவு மழை இருக்கும் என்று நம்புகிறோம். ரூ.7 ஆயிரம் கோடி கடன் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- 27-2-2017 அன்று முதல்-அமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மத்திய அரசிடம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் கோடி நிதி கேட்கப்பட்டது. வார்தா புயல் நிவாரணத்துக்கு ரூ.62 ஆயிரத்து 132 கோடி நிதி கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 14 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளது. எனவே, மத்திய அரசிடம் போதிய நிவாரணம் பெற தமிழக அரசு தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:- மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பது தொடர்பாக இன்னும் ஆதாரப்பூர்வமாக ஆணை எதுவும் வரவில்லை. வந்த பிறகு பார்ப்போம்.

பழமொழி

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- மற்ற மாநிலங்களை விஞ்சி போதையின் உச்சத்திற்கு தமிழ்நாட்டை அழைத்து சென்று கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அவர்களால் கல்வி கடனை செலுத்த முடியவில்லை. எனவே, இளைஞர்களின் எதிர்காலம் கருதி, வேலையில்லாத இளைஞர்கள் வாங்கிய கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நிறைவாக, ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. ஆக, சட்டியில் எதுவும் இல்லாமல், வெறும் அகப்பையை வேகமாக சுழற்றியிருக்கிறார் நிதியமைச்சர்.

இந்த அரசின் நிலைமைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கின்றபோது ஒரு பாடலின் விளக்கம் தான் என்னுடைய நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால், காட்டில் ஒருவன் சென்று கொண்டிருக்கிறான். திடீரென யானை ஒன்று அவனை கொல்வதற்காக பின் தொடர்ந்து துரத்துகிறது. யானையிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக அவன் இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு கிணற்றின் பக்கம் போனான். அங்கு முளைத்திருந்த அருகம் புல்லின் வேரைப் பிடித்துக்கொண்டு கிணற்றின் உள்ளே குதிக்கப்போனான். அப்போது 5 தலை பாம்பு ஒன்று இருப்பது தெரிந்தது. அதனால், அவன் வேரை பற்றித் தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். நெருக்கடியான அந்த வேளையில் ஒரு எலி அந்த வேரை கடித்துக்கொண்டிருந்தது என்பது அந்த பாடலின் பொருள்.

இந்த அரசு தான் அந்த மனிதன். துரத்தும் யானை தான் நிதிப்பற்றாக்குறை. இடிந்து விழும் நிலையில் உள்ள கிணறு தான் வருவாய் பற்றாக்குறை. மனிதனை விழுங்கத்துடிக்கும் 5 தலை பாம்பு யாரென்பதையும், வேரை கடிக்கும் எலி யாரென்பதையும் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மேலேயும் ஆபத்து, கீழேயும் ஆபத்து. தொங்கிக்கொண்டிருப்பதோ எலி கடித்துக்கொண்டிருக்கும் வேரில். இப்படிப்பட்ட நிலையில், இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளோ?.

கூச்சல் - குழப்பம்

அமைச்சர் பி.தங்கமணி:- எதிர்க்கட்சி தலைவர் இங்கே பாழடைந்த கிணறு கதை ஒன்றை சொன்னார். நான் கேட்கிறேன், நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது எங்கள் குடும்ப சண்டையில் ஏன் தலையிட்டீர்கள்?. ஆட்சி என்றைக்கும் கவிழப்போவது இல்லை.

(இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க.வினரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் - குழப்பம் நீடித்தது)

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- அமைச்சர் சொல்வது தவறு. அப்படி என்றால் அதை நிரூபிக்கட்டும்.

அமைச்சர் பி.தங்கமணி:- அன்று நடந்ததைத் தான் கூறினேன். தவறாக இருந்தால் நீக்குங்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு சட்டப்போராட்டம் நடத்தித் தான் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து, 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அணையை பலப்படுத்துவதற்காக ரூ.7 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை பற்றி இங்கே சொல்லியிருக்கிறார். 2007-ம் ஆண்டு 2-வது மாதமே நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வந்தது. அப்போது மத்திய ஆட்சியில் நீங்கள் இடம்பெற்றிருந்தீர்கள். அப்போதே இதை நடைமுறைப்படுத்தி இருந்தால் இந்த பிரச்சினைக்கு வழிவகுத்திருக்காது. அப்போதே அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் விவசாயிகள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள்.

சபாநாயகர் மறுப்பு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- காவிரி நடுவர் மன்றத்தை கொண்டு வந்தது நாங்கள் தான். ஆனால், அதை கெஜட்டில் வெளியிடச் செய்தது நீங்கள். ஆனால், அதுவே தண்ணீர் கொண்டுவராது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் மத்தியில் 2007-2010-ம் ஆண்டு காலத்தில், 3 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்தீர்கள். அப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியது வந்திருக்காது. இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. அரசும் கவனமாக செயல்படுகிறது. தமிழகத்திற்கு முறையான நீர் கிடைக்கும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு 17 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்டது. நாம் கேட்டது 340 டி.எம்.சி. தண்ணீர். ஆனால், கிடைத்தது 182 டி.எம்.சி. தான். பெற்ற நீரை உறுதிப்படுத்த அரசாணையை பெற்றுத்தாருங்கள் என்று ஜெயலலிதா கூறினார். 2011-ம் ஆண்டு வரை அதற்கு விடிவு வரவில்லை. 2011-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதும் பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். பின்னர், சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று 2013-ம் ஆண்டு அரசாணை பெறப்பட்டது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் கருத்தில் பிழை இருக்கிறது. திருத்திக்கொள்ள வேண்டும்.

(இதற்கு துரைமுருகன் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேசவும் முயன்றனர். அவர்களுக்கு அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்தார்)

உள்ளாட்சி தேர்தல்

சபாநாயகர் ப.தனபால்:- எதிர்க்கட்சி துணைத்தலைவர் கேட்கும்போதெல்லாம் வாய்ப்பு வழங்கினேன். அனைவரும் அமருங்கள்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- உள்ளாட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்த தயாரானோம். ஆனால், கோர்ட்டில் வழக்கு போட்டது யார்?. உள்நோக்கம் இருக்கிறது.

(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்).

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- நாங்கள் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வழக்கு போடவில்லை. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்று தான் வழக்கு போட்டுள்ளோம். அமைச்சர் தான் உள்நோக்கத்தோடு பேசுகிறார்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story