வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்த நடவடிக்கை சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலுரை


வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்த நடவடிக்கை சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலுரை
x
தினத்தந்தி 24 March 2017 10:45 PM GMT (Updated: 24 March 2017 8:27 PM GMT)

வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

சென்னை,

நிதிப்பற்றாக்குறையின் அளவு 2.79 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்றும், வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துகளுக்கு நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

வருவாய் பற்றாக்குறை அல்லது வருவாய் உபரி என்பது ஒரு அரசை மட்டும் சார்ந்து வருவது அல்ல. அது பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையைச் சார்ந்து வரக்கூடியது. தி.மு.க. ஆட்சியிலும் வருவாய்உபரியும், வருவாய் பற்றாக்குறையும் இருந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியிலும் அவை இருந்திருக்கின்றன.

வரிச்சுமை ஏறாது

வரி அளவை மேலும் உயர்த்த வேண்டுமென்றால் பெட்ரோலிய பொருட்கள், மதுபானங்கள் மீதுதான் வரி அளவை உயர்த்த வேண்டும். இப்பொருட்கள் மீதான வரிகள் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, இதை மேலும் உயர்த்த இயலாது.

மூன்று ஆண்டுகளாக எரிபொருள் பயன்பாடு அதிகரித்தாலும் வரிவசூலில் எந்த முன்னேற்றமும் இல்லை. சராசரியாக எரிபொருள் பயன்பாட்டில் 12 சதவீத வளர்ச்சி ஏற்பட்டாலும், 2014-15-ம் ஆண்டில் அரசிற்கு சுமார் 1,300 கோடி ரூபாய் அளவிற்கும், 2015-16-ம் ஆண்டில் சுமார் 2,800 கோடி ரூபாய் அளவிற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

2014-15-ம் ஆண்டு முதல் மாநிலத்தின் வணிகவரி வசூல் குறைந்ததற்கும், வருவாய் பற்றாக்குறை அதிகமானதற்கும் இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

குற்றச்சாட்டு

மாநில நிதிநிலை மோசமடைந்து விட்டதாகவும், நிதி மேலாண்மை சரியாக இல்லை என்றும் சிலர் தொடர்ந்து விமர்சனம் செய்கின்றனர்.

இந்த ஆட்சியில் நிதி நிர்வாகம் மோசமாகிவிட்டதாக நான் கருதவில்லை. வரி வருவாயில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார வளர்ச்சியை ஒட்டி அமைகிறது.

வருவாய் குறையும்போது அதை சரிசெய்ய வரி அளவை உயர்த்த வேண்டும். அதை அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. அதனால்தான் இந்த ஏற்றத்தாழ்வுகளை பொறுமையுடன் சமாளித்து பொருளாதார வளர்ச்சி தொய்வு ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்கள்நல திட்டங்கள்

தமிழ்நாடு சொந்த வரி வருவாயை அதிக அளவில் சார்ந்துள்ளது. எனவே, வரிவசூல் பாதிப்பு ஏற்பட்டால் நிதி நிலை வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதுதவிர, பிற மாநிலங்கள் செயல்படுத்தப்படாத பல திட்டங்களை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது.

உதாரணமாக, சிறப்பு பொது வினியோக திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், மகளிருக்கு மகப்பேறு கால உதவி திட்டம், பெண்களுக்கு திருமண உதவி திட்டம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பசுமை வீடுகள் திட்டம் என இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால், பிற மாநிலங்களைக் காட்டிலும் நமது மாநிலத்தில் கூடுதலாக சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு மேல் வருவாய் செலவினம் ஏற்படுகிறது.

பிற மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த மக்கள்நல திட்டங்களை நிறுத்த முடியாது என்பதால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும் இத்திட்டங்களை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.

மாற்றம் வருகிறது

தற்போது பொருளாதார நிலையில் சில சாதகமான மாற்றங்கள் தென்படுகிறது. இதன் அடிப்படையில்தான் 2016-2017-ம் ஆண்டு அளவிலேயே அதாவது 15,930 கோடி ரூபாய் என்ற அளவிலேயே 2017-2018-ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும்போது வரி வருவாய் அதிகரிக்கும் என்பதால் வருவாய் பற்றாக்குறையும் படிப்படியாக குறைக்கப்படும்.

உதய் திட்டம்

2011-2012-ம் ஆண்டு முதல் இதுவரை நிதிப்பற்றாக்குறை மூன்று சதவீத அளவிற்கு உட்பட்டே உள்ளது. 2016-2017-ம் ஆண்டில் மட்டும் மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழ்நாடு இணையாததால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் 22,815 கோடி ரூபாய்க்கான கடனை அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கூடுதல் நிதி சுமையினால் 2016-2017-ம் ஆண்டில் மட்டும் நிதிப்பற்றாக்குறை உயர்ந்து 4.58 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அரசும் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. ஆனால், இது தற்காலிகமானதுதான். மீண்டும் 2017-2018-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறையின் அளவு மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்து பேசினார்.

Next Story