இடைத்தேர்தல் களம் வெற்றிகளுக்கான முன்னறிவிப்பாக அமைய வேண்டும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


இடைத்தேர்தல் களம் வெற்றிகளுக்கான முன்னறிவிப்பாக அமைய வேண்டும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 March 2017 11:15 PM GMT (Updated: 25 March 2017 7:02 PM GMT)

இடைத்தேர்தல் களம் தி.மு.க.வின் தொடர் வெற்றிகளுக்கான முன்னறிவிப்பாக அமையும் அளவுக்கு பாடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் கடன்

தமிழக சட்ட மன்றத்தில் அ.தி.மு.க. (சசிகலா அணி) அரசால் தாக்கல் செய்யப்பட்ட 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மக்களின் நலன் சார்ந்ததாகவுமில்லை, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என்பதை, வாக்களித்த மக்களே உணர்ந்திருக்கிறார்கள். ஆளுபவர்களும் அதை உணர்ந்த காரணத்தாலோ என்னவோ, வழக்கமாக ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறக்கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரு வார காலத்திற்குள்ளாக முடித்துவிட்டு, மொத்த கவனத்தையும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்.

தற்போது தமிழக அரசின் கடன்தொகை என்பது 3.14 லட்சம் கோடி ரூபாய் என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு தமிழரின் தலையிலும் 36 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் சுமத்தப்பட்டு தலை குனிந்து நிற்க வேண்டிய நிலையைத்தான் அ.தி.மு.க. அரசு உருவாக்கி இருக்கிறது. இதையெல்லாம் பேரவையில் எடுத்துக் கூறியபோது ஆட்சியாளர்களிடமிருந்து உரிய பதில் எதுவும் வரவில்லை.

கச்சத்தீவு

சட்டசபையில் தி.மு.க.வை வேண்டுமென்றே சீண்டும் விதமாக, தி.மு.க ஆட்சிக்காலத்தைப் பற்றிய பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே அமைச்சர்களின் செயல்பாடாக அமைந்தது. குறிப்பாக, கச்சத்தீவு பிரச்சினையில் தி.மு.க. மீதும் கருணாநிதி மீதும் அ.தி.மு.க.வினர் இட்டுக்கட்டி செய்து வரும் பொய் பிரசாரத்தை பேரவையிலும் அவர்கள் செய்தபோது, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக்கூடாது என அன்றைய தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியதையும், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டதையும், அதில் இணையாமல் எதிர்நிலையில் நின்றது அ.தி.மு.க.தான் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறினேன்.

வெற்றி

பேரவைத்தலைவரே ஒருபக்க சார்புடன் செயல்படுவது அறமாகுமா என்ற அடிப்படையில்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோம். உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் வெற்றி பெறாது என்பது தெரியும். இங்கே வெற்றி முக்கியமல்ல, விளைவுதான் முக்கியம்.

வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியுற்றாலும், அதன்பின் மீண்டும் தனக்குரிய இருக்கையில் அமர்ந்து உரையாற்றிய சபாநாயகர், என் மீது நம்பிக்கை இல்லாமல் எனக்கு ஆதரவு அளிக்காத தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் நான் என்னுடைய பணியை நிறைவேற்றுவேன் என்று ஒரு உறுதிமொழியை அளித்தார். வெற்றியைவிட இந்த விளைவுதான் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமாகும்.

எதிர்க்கட்சி வரிசையிலே இருந்தாலும், மக்கள் நலனுக்காக செயல்படுவதில் பேரவையில் முதலிடம் நமக்குத்தான். எண்ணிக்கையிலும் முதலிடம் பெறுகின்ற காலம் விரைந்து வருகிறது. சட்டமன்றத்தைப் போலவே மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். இடைத்தேர்தல் களம் நமது தொடர் வெற்றிகளுக்கான முன்னறிவிப்பாக அமையப் பணியாற்றுவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நீட்’ தேர்வு

அ.தி.மு.க. அரசு தமிழகத்தின் நலன்களை எல்லாம் ஒவ்வொன்றாக காவு கொடுத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்கள்- அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை எழுதும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், சட்டமன்றத்தில் கண் துடைப்பிற்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டு, அந்த சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியாமல், சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து கிடைக்கும் வழிகாட்டுதலில் தவித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசோ ‘நீட்’ தேர்வை தமிழகத்தில் நடத்தியே தீருவது என்று தீவிரம் காட்டி வருகிறது. ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளும் முடிந்து இப்போது மே 7-ந் தேதி ‘நீட்’ தேர்வும் வரவிருக்கின்ற நிலையில் மாணவர்கள் என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் திகைப்பாக இருக்கிறது.

வருத்தம்

2016 நவம்பர் மாதம் 10-ந் தேதியன்று நடைபெற்ற பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திரபிரதான், தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதை வரவேற்று நான் கூட அறிக்கை விடுத்திருந்தேன். அப்படி கைவிடப்பட்ட திட்டம் பற்றி சமீபத்தில் 28.2.2017 அன்று டெல்லியில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. ஆனால் இதுவரை பினாமி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமின்றி, மீத்தேன் திட்டத்தை மீண்டும் கொண்டுவரக்கூடாது என்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும் பெட்டிப் பாம்பு போல் அடங்கிக் கிடக்கிறது.

லட்சக்கணக்கான மாணவர்களின் நலன், ஏழரைக் கோடி மக்கள் சந்தித்து வரும் வறட்சியின் வாட்டம், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன் திட்டம், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டவற்றில் தமிழக நலன் சார்ந்த முடிவுகளை மத்திய அரசு எடுக்கத் தயங்குவதும், தமிழக மக்களின் நலன் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாததும் உள்ளபடியே வருத்தமளிக்கிறது.

இலங்கை பிரச்சினை

அதுமட்டுமின்றி தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மீறும் வகையில் இலங்கை இனப்படுகொலை பற்றிய சுதந்திரமான விசாரணைக்கான காலக்கெடுவையும் இப்போது இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதை மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் அமைதியாக வேடிக்கை பார்த்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து விட்டது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story