“குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்” தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்


“குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்” தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்
x
தினத்தந்தி 25 March 2017 9:45 PM GMT (Updated: 25 March 2017 7:55 PM GMT)

“ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்”, என்று தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தனது பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னை, 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று தண்டையார்பேட்டை பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். தண்டையார்பேட்டை டி.எச்.ரோடு, செரியன்நகர், அசோகன்நகர், தனபால்நகர் மற்றும் துறைமுகம் வாரிய குடியிருப்பு பகுதி போன்ற பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக பெண்களிடம் சென்று அடிப்படை தேவைகளை நிச்சயமாக பூர்த்தி செய்வேன் என்று கூறி மருதுகணேஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அடிப்படை தேவைகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதுதான் எங்களது முதல்பணி. குறிப்பாக குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தினமும் தண்ணீருக்காக அலைந்து திரியும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நான் நிச்சயம் சரி செய்வேன். தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவும் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாட்டை போக்குவேன். கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பேன்.

தொகுதிகளில் கழிவுநீர் பிரச்சினைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை சீரான முறையில் வினியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ஒட்டுமொத்தத்தில் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக முன்னின்று பணியாற்றுவேன். எனவே என்னை இடைத்தேர்தலில் நீங்கள் (பொதுமக்கள்) வெற்றி பெறச் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story