ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு கூடுதல் பார்வையாளர் வருகை


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு கூடுதல் பார்வையாளர் வருகை
x
தினத்தந்தி 27 March 2017 12:15 AM GMT (Updated: 26 March 2017 6:47 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு கூடுதல் பார்வையாளராக செலவின பார்வையாளர் இன்று முதல் பணியில் ஈடுபட உள்ளார். இன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகிறது.

சென்னை,

தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால், காலியான ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பலமுனை போட்டி

இந்த தேர்தலில், அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் இ.மதுசூதனன், அ.தி. மு.க. (அம்மா) சார்பில் டி.டி.வி. தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. சார்பில் மருது கணேஷ், தே.மு. தி.க. சார்பில் மதிவாணன், பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன் ஆகியோர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலமுனை போட்டி நிலவுவதால், அங்கு தேர்தல் களமும் சூடுபிடித்து உள்ளது. வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டு நிற்பதால், அக்கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ முடக்கப்பட்டு உள்ளது. இரு அணி வேட்பாளர்களும் தங்கள் பலத்தை நிரூபிக்க சுயேச்சை சின்னங்களுடன் மல்லுக்கட்டுகின்றனர்.

வேட்பாளர் இறுதி பட்டியல்

வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 127 வேட்புமனுக்கள் தாக்கலாகி இருந்தன. இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் பி.நாயர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் உள்பட 45 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப்பெற இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அதாவது, தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களது வேட்புமனுவை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை திரும்பப்பெறலாம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 82 பேரின் மனுக்களில் 11 பேர் மாற்று வேட்பாளர்கள் ஆவார்கள். எனவே, அவர்கள் இன்று தங்களது வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதம் உள்ள 71 பேரில் சில சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப்பெறுவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகிறது.

சின்னம்

வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, உடனடியாக சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். அப்போது, பட்டியலில் உள்ள சின்னங்களில் இருந்து விரும்பிய சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். ஒரே சின்னத்தை பெற பலர் விரும்பினால், குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒதுக்கப்படும்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு சுயேச்சை சின்னங்களில் இருந்தே சின்னம் ஒதுக்கப்பட இருக்கிறது. படகு, பேனா, திராட்சை கொத்து ஆகிய 3 சின்னங்களில் ஒன்றை அவர் தேர்ந்தெடுப்பார் என தெரிகிறது.

வாக்குப்பதிவு எந்திரம்

வேட்பாளர்களின் எண்ணிக்கை 63 வரை இருந்தால் மட்டுமே ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியும். அதாவது, வாக்குகள் பதிவாகும் கட்டுப்பாட்டு எந்திரம் ஒன்றுடன் 4 வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க முடியும். ஒரு எந்திரத்தில், 16 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை இடம்பெற்று இருக்கும். இப்படி, 4 வாக்குப்பதிவு எந்திரங்களிலும் 63 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை இடம்பெறச் செய்ய முடியும். கடைசியாக இருக்கும் பொத்தான் ‘நோட்டா’வுக்கு (அதாவது யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) ஒதுக்கப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 256 வாக்குச்சாவடிகள் உள்ளன. இருந்தாலும், 330 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1,350 வாக்குப்பதிவு எந்திரங்களும் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், 63 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் நின்றால், பழைய முறையான வாக்குச்சீட்டு மூலம் தான் தேர்தல் நடத்தப்படும்.

எனவே, தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடைபெறுமா? அல்லது வாக்குச்சீட்டு மூலம் நடைபெறுமா? என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

செலவின பார்வையாளர்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை சுமுகமாக நடத்துவதற்காக, தேர்தல் பொது பார்வையாளர் பிரவீன் பிரகாஷ், தேர்தல் காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா ஆகியோர் 24-ந் தேதி முதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கூடுதலாக தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அபர்ணா வில்லூரி இன்று காலை முதல் பணியில் ஈடுபட உள்ளார்.

Next Story