உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது


உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது
x
தினத்தந்தி 27 March 2017 5:31 PM GMT (Updated: 27 March 2017 5:31 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

சென்னை,

தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. இந்த தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளை பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்கிறேன். புதிய அறிவிப்பை சட்டவிதிகளை பின்பற்றி பிறப்பித்து, டிசம்பர் 31–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதுதொடர்பான பிரதான வழக்கு நீதிபதி முன்பு நிலுவையில் இருந்து வருகிறது.

தேர்தல் நடத்தாதது ஏன்?

இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் முன்பு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஒரு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தமிழக உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31–ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளேன். அந்த உத்தரவுக்கு டிவிசன் பெஞ்ச் தடைவிதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, இதுவரை உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை? என்பது குறித்து பிற்பகலில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

வாக்காளர் பட்டியல்

இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் பி.நெடுஞ்செழியன் நேற்று பிற்பகலில் நீதிபதி முன்பு ஆஜராகி, ‘இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாக்காளர்கள் விவர பட்டியலை பெற்று, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏற்ப வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், டிவிசன் பெஞ்சு முன்பு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது’ என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரதான வழக்கு வருகிற ஏப்ரல் 3–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.


Next Story