ரஜினிகாந்த் இலங்கை செல்வதை எதிர்த்தது ஏன்? திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் கூட்டாக விளக்கம்


ரஜினிகாந்த் இலங்கை செல்வதை எதிர்த்தது ஏன்? திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் கூட்டாக விளக்கம்
x
தினத்தந்தி 28 March 2017 9:16 PM GMT (Updated: 28 March 2017 9:15 PM GMT)

ரஜினிகாந்த் இலங்கை செல்வதை எதிர்த்தது ஏன்? என திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

ரஜினிகாந்துக்கு நன்றி

தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து இலங்கை செல்லாமல் தனது பயணத்தை கைவிட்ட ரஜினிகாந்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ரஜினிகாந்த் எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு செல்லலாம். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கலாம். அதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இப்போது நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு 3 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்திற்கு பிறகு இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 24 ஆயிரம் பேரை சரண் அடைய செய்த சிங்கள அரசு, அவர்களை சிறையில் வைத்துள்ளதா? அல்லது கொலை செய்துவிட்டதா? என்பது தெரியவில்லை.

நன்மை செய்வது போன்ற தோற்றம்

இரண்டாவது, ஈழத் தமிழர்களின் வாழ்விடம் மற்றும் விவசாய நிலங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. மூன்றாவது, யாரை நம்பி ஈழத் தமிழர்கள் வாக்களித்தார்களோ? அவர்களில் சம்பந்தம் உள்பட தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள அரசுக்கு ஆதரவாக மாறி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை சென்றால், அந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள், தமிழ் ஆர்வலர்கள் என சுமார் 4 லட்சம் பேரை திரட்டி, அதில் சம்பந்தம் உள்பட தமிழ் அரசியல்வாதிகளையும் கலந்துகொள்ள வைத்து சிங்கள அரசு ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்துகொண்டு இருப்பது போன்ற தோற்றத்தை உலக மக்களிடையே ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது.

எனவே, இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என ரஜினிகாந்துக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.

பிறப்புக்கடமை

ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் என்ன என்ன செய்து இருக்கிறோம் என்பது உலக தமிழர்களுக்கு தெரியும்.

நாங்கள் அரசியலுக்காகவோ அல்லது விளம்பரத்துக்காகவோ இதை செய்யவில்லை. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது எங்கள் பிறப்புக்கடமை.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story