நாளை மறுநாள் முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது சம்மேளன தலைவர் தகவல்


நாளை மறுநாள் முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது சம்மேளன தலைவர் தகவல்
x
தினத்தந்தி 22 April 2017 9:30 PM GMT (Updated: 22 April 2017 7:48 PM GMT)

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது என சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

நாமக்கல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்து உள்ளன. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

4 லட்சம் லாரிகள் ஓடாது 

இந்தநிலையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. இது குறித்து சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:–

விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25–ந் தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்துக்கு சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. எனவே அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் லாரிகள் ஓடாது. அனைத்து லாரி உரிமையாளர்களும் தங்களது லாரிகளை இயக்காமல் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story