திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடை-பாரை அடித்து நொறுக்கிய பெண்கள்


திருப்பூரில் டாஸ்மாக் மதுக்கடை-பாரை  அடித்து நொறுக்கிய பெண்கள்
x
தினத்தந்தி 26 April 2017 8:38 AM GMT (Updated: 26 April 2017 8:37 AM GMT)

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். இதில், ஏராளமான பெண்களும் இருந்தனர்.


தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மது கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் புதிய மது கடைகள் தொடங்க பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் தினமும் மது கடைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் அரங்கேறி வருகிறது.

திருப்பூர் அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியில் ஒரு டாஸ்மாக் மது கடை பாருடன் செயல்பட்டு வருகிறது. கல்லூரி அருகில் உள்ள இந்த மது கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் இதேபோல் அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அந்த மது கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், 100-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டனர். அவர்கள் திருப்பூர் - காங்கயம் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.  1 மணிநேரத்திற்கும் மேலாக சாலைமறியல் நடந்தும் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை.

மேலும் மறியல் நடந்த இடத்திற்கு ஊத்துக்குளி போலீசார் குறைந்த அளவிலேயே சென்று இருந்தனர். நேரம் செல்ல, செல்ல பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் பொங்கி எழுந்த பொதுமக்கள் திடீரென மதுக்கடை, பாரை நோக்கி ஓடினர். அப்போது பெண்கள் மதுக்கடையின் முன்பகுதியை அடித்து நொறுக்கினர். மேலும் மதுக்கடையை ஒட்டி இருந்த பாரையும் அடித்து நொறுக்கினர். பாருக்குள் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர்.

மேலும் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. குறைந்த அளவிலான போலீசாரே இருந்ததால் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா தலைமையில் அதிரடி படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களை சமாதான செய்ய முயற்சி செய்தனர். ஆனால் பொதுமக்கள் மதுக்கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி காங்கயம் ரோட்டில் சாலைமறியலை தொடர்ந்தனர்.

ஏற்கனவே சாமாளபுரத்தில் மது கடைக்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்திய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து இந்த பிரச்சினையில் போலீசார் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர் மறியல் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுவதாக பலமுறை மனு கொடுத்தும் கடையை அடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மறியல் செய்த எங்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே இந்த மதுக்கடையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

Next Story