இரட்டை இலை சின்னம் பெற பணம் கொடுக்க முயன்ற வழக்கு: டெல்லி போலீசார் விசாரணையை விரிவுபடுத்த வேண்டும்


இரட்டை இலை சின்னம் பெற பணம் கொடுக்க முயன்ற வழக்கு:  டெல்லி போலீசார் விசாரணையை விரிவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 26 April 2017 4:45 PM GMT (Updated: 26 April 2017 3:52 PM GMT)

இரட்டை இலை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் பணம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணையை டெல்லி போலீசார் விரிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஊழல் பணம்

ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் தினகரனுக்கு சொந்தமானது அல்ல. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மூலம் லஞ்சமாக பெறப்பட்டது என்பது வருமான வரித்துறை நடத்திய சோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல், தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சமாக தருவதற்காக இடைத்தரகருக்கு முன்பணமாக தரப்பட்டிருந்த சில கோடிகளும், இறுதிகட்டமாக தரப்பட இருந்த ரூ.60 கோடியும் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மூலம் ஊழல் செய்து சேர்த்த பணமாகத்தான் இருக்க முடியும்.

விசாரிக்கப்பட வேண்டும்

இந்தப் பணத்தை திரட்டுவது பற்றி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுடன் தினகரன் நிச்சயம் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டுச்சதியின் முடிவில்தான் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்தால் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத்தருவதாக தினகரனின் இடைத்தரகருக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து யாராவது வாக்குறுதி அளித்தார்களா? அப்படியானால் அந்த வாக்குறுதியை அளித்தவர்கள் யார்? அவர்கள் எந்த அதிகார நிலையில் உள்ளவர்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து

சின்னத்திற்காக லஞ்சம் கொடுப்பவர்களைவிட, அதற்கு இடம் தருபவர்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு கூடுதல் ஆபத்தாகும். எனவே, தேர்தல் ஆணையத்திற்கு, இடைத்தரகர் மூலமாக தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு உள்ள தொடர்புகளையும், இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பதையும் கண்டறிய விசாரணை வளையத்தை டெல்லி போலீசார் விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்திற்கே அ.தி.மு.க. அம்மா அணி லஞ்சம் கொடுக்க முயன்றிருப்பதால், இதை ஜனநாயக படுகொலையாக கருதி அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் நிரந்தரமாக முடக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story