மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர அரசு டாக்டர்களுக்கு என்னென்ன விதிமுறைகள் பொருந்தும்?


மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர அரசு டாக்டர்களுக்கு என்னென்ன விதிமுறைகள் பொருந்தும்?
x
தினத்தந்தி 26 April 2017 10:46 PM GMT (Updated: 26 April 2017 10:45 PM GMT)

மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர அரசு டாக்டர்களுக்கு என்னென்ன விதிமுறைகள் பொருந்தும்? என தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையின்போது, அரசுப்பணியில் உள்ள டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி தான் ‘போனஸ்’ மதிப்பெண் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு 17–ந்தேதி உத்தரவிட்டது. இதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் பறிக்கப்படுவதாக கூறி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேல்முறையீடு

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாக்டர் பிரபு உள்பட அரசு டாக்டர்கள் பலர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி.வில்சன், கே.எம்.விஜயன் தங்கள் வாதத்தில் கூறியதாவது:–

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாகவும் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக 25 சதவீதம் அரசுப்பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

தமிழக அரசின் விளக்க குறிப்பேட்டின்படி சாதாரண கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மதிப்பெண்ணும், மலைப்பகுதிகள் மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்களும் ‘போனஸ்’ மதிப்பெண்ணாக வழங்கப்படும். இதன்படி ஒருவருக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும்.

இட ஒதுக்கீடு பாதிப்பு

ஆனால், ஐகோர்ட்டு தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் பிரிவு 9(4)–வை பின்பற்றி இந்த கல்வியாண்டில் ‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் அதிகபட்சம் 30 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்கவும், மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றி நடத்தவும், தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுப்பணியில் உள்ள டாக்டர்களுக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையில் மாநிலங்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டின்படி அந்தந்த மாநிலங்களே உரிய விதிமுறைகளை வகுத்து அந்த இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என விதிகள் உள்ளதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.

ஒத்து போகிறீர்களா?

மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி மலை மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே போனஸ் மதிப்பெண் வழங்க முடியுமே தவிர, இதர கிராமப்புறங்களில் பணி புரிபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க இயலாது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் வி.பி.ராமன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டார்கள்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தமிழக அரசு ‘நீட்’ தேர்வை முதலில் கடுமையாக எதிர்த்தது. ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழலில், ‘நீட்’ தேர்வுக்கு ஒத்து போக தமிழக அரசு முடிவு செய்து விட்டதா?’ என்று அட்வகேட் ஜெனரலை பார்த்து கேட்டனர்.

விதிமுறைகள்

பின்னர், ‘மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர அரசு டாக்டர்களுக்கு என்னென்ன விதிமுறைகள் பொருந்தும்? கடினமான பகுதி என்றால் என்ன? அதை எப்படி வரையறை செய்துள்ளீர்கள்? என்பதை இந்திய மருத்துவ கவுன்சிலும், தமிழக அரசும் விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.


Next Story