இந்தியன் வங்கியில் தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


இந்தியன் வங்கியில் தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
x
தினத்தந்தி 26 April 2017 10:48 PM GMT (Updated: 26 April 2017 10:47 PM GMT)

இந்தியன் வங்கியில் தங்கத்தை பத்திரங்களாக வாங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

சென்னை,

இதுகுறித்து இந்தியன் வங்கியின் சென்னை (வடக்கு) மண்டல பொதுமேலாளர் எம்.கார்த்திகேயன் கூறியதாவது:–

தங்கத்தை தங்கமாக வாங்கி வைத்துக் கொள்ளாமல், அதை பத்திரங்களாக (பாண்ட்) வாங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015–ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஏப்ரல் 24 முதல் 28–ந் தேதிவரை இந்தத் திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நபர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 500 கிராம் தங்கம் வரைக்கான பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். குடும்பத்தினரும் இணைந்து அதே அளவு தங்கத்துக்கான பத்திரங்களைப் பெறலாம்.

8 ஆண்டுகள் செல்லும்

தங்கத்தின் தற்போதைய சந்தை விலைப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,901 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு 12.5.17 அன்று பத்திரங்கள் வழங்கப்படும்.

இந்த பத்திரம் 8 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். பத்திரத்தை வாங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதை முடித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது 5–ம் ஆண்டில் இருந்து 8–ம் ஆண்டு வரை, அந்தப் பத்திரத்தை முடித்துக் கொள்ளலாம். பத்திரத்தை முடிக்கும்போது, அப்போதுள்ள சந்தை விலைப்படி தங்கத்துக்கான பணம் தரப்படும்.

பல்வேறு பயன்கள்

இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் பல பயன்களை வாடிக்கையாளர் அடையலாம். தங்கத்தை வாங்கி வீடுகளில் வைக்கும்போது, தொலைந்து போகும் வாய்ப்பு, திருடப்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. வங்கி லாக்கர்களில் வைத்தாலும், அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டும். தங்கமாக வாங்கும்போது சேதாரங்கள் இருக்கும்.

ஆனால் தங்கத்தை பாண்ட் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டால் அந்த பிரச்சினைகள் எழாது. அதோடு, ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டித் தொகையும் அந்த வாடிக்கையாளருக்கு தரப்படும். தங்கத்தின் விலை உயர்ந்தால் வட்டித் தொகையும் உயரும்.

அந்த பத்திரத்தை ஈடு வைத்து கடன் பெற முடியும். தங்கத்தை வைத்து செய்யும் வர்த்தகங்களுக்கும் அந்தப் பத்திரத்தை பயன்படுத்தலாம். இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்றால், அனைத்து இந்தியன் வங்கிக் கிளைகளிலும் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story