தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்


தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்
x
தினத்தந்தி 26 April 2017 10:48 PM GMT (Updated: 26 April 2017 10:47 PM GMT)

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

சென்னை,

முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ்நாடு தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னையில் இருந்து கிடைக்கும் நீரா பான உற்பத்திக்கு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்ததற்காக கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அந்த கூட்டமைப்பினர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

அரசு உத்தரவாதம்

‘நீரா’–வை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை நிறைவேற்ற முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்வந்துள்ளார்.

இது தென்னை விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பானம். பல வைட்டமின் சத்துகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் இதை பருகலாம். வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்ளூர் சந்தைகளில் விற்கவும் இந்த அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது.

மதிப்புக்கூட்டு பொருட்கள்

இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இனி தமிழக விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது போதை பொருள் கிடையாது. அது தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்து பானம். நீராவில் இருந்து நீரா சாக்லேட், நீரா தேன், நீரா பிஸ்கட் போன்ற பல மதிப்புக்கூட்டு பொருட்களையும் தயாரிக்க முடியும். மரத்தில் இருந்து இறக்கியதும் புளிப்பதற்கு முன்னதாக அதை குளிர்படுத்துவோம். புளித்தால் கள்ளாகிவிடும்.

3 மாதத்தில் சந்தையில் ‘நீரா’

தென்னை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகள் தென்னை மரம் வைத்துள்ளனர்.

தென்னை சர்க்கரையால் மக்களின் உடல் நலம் மேம்படும். தேங்காய் எண்ணெயில் கொழுப்பு சத்து இல்லை. அதன் மூலமாகத்தான் அழகு, ஆயுள், அறிவு அதிகரிக்கிறது. நீரா, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் ஆகியவை வாழ்வின் அடிப்படை உணவாக இருக்கிறது.

பொள்ளாச்சி ஜெயராமன் தனது தொகுதியில் இன்னும் 3 மாதங்களுக்குள் இதை தயாரிப்பதற்கான ஆணையை பெற்று தர இருக்கிறார். தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் சந்தையில் நீரா கிடைக்கும்.

15 கோடி தென்னை

12 ஆயிரம் மரத்தில் 25 ஆயிரம் லிட்டர் நீரா கிடைக்கும். தமிழகத்தில் 15 கோடி தென்னை மரங்கள் உள்ளன. எனவே தேங்காய் உற்பத்திக்கும் பாதிப்பு இருக்காது. தஞ்சாவூர் மாவட்டம் ராஜேந்திரபுரத்திலும் டெட்ராபேக் முறையில் அதை தயாரிக்க அரசின் அனுமதி கேட்டிருக்கிறோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story