சென்னையில் நடந்த இரட்டை கொலை சம்பவம்: தாய்–தங்கையை கொன்ற என்ஜினீயர் கைது பரபரப்பு வாக்குமூலம்


சென்னையில் நடந்த இரட்டை கொலை சம்பவம்:  தாய்–தங்கையை கொன்ற என்ஜினீயர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 27 April 2017 8:46 PM GMT (Updated: 27 April 2017 8:45 PM GMT)

சென்னை சைதாப்பேட்டையில் தாயையும், தங்கையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இரட்டைக்கொலை

சென்னை சைதாப்பேட்டை கே.பி.கோவில் தெருவில் உள்ள மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வசித்துவந்தவர் ஹேமலதா. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்தார். இவரது கணவர் சண்முகம் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் ஆவார். ஒரு ஆண்டுக்கு முன்பு சண்முகம் மாரடைப்பால் இறந்துபோனார். வீட்டில் ஹேமலதா தனது மகன் பாலமுருகன், மகள் ஜெயலட்சுமி ஆகியோருடன் வசித்துவந்தார்.

பாலமுருகன் எம்.இ. என்ஜினீயரிங் பட்ட மேற்படிப்பு படித்துவிட்டு, தரமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பாதித்தார். மகள் ஜெயலட்சுமி என்ஜினீயரிங் மாணவி. சந்தோ‌ஷமாக வாழ்ந்த இந்த குடும்பம் சண்முகம் இறந்தபிறகு சோகத்தில் மூழ்கியது. பாலமுருகன் அடிக்கடி தாயுடனும், தங்கையுடனும் சண்டைபோட்டு வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் ஹேமலதாவும், ஜெயலட்சுமியும் கொடூரமான முறையில், கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

ரத்தவெள்ளத்தில் பிணங்கள்

சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் சண்முகத்தின் தங்கை யசோதா குடும்பத்தோடு வசித்துவந்தார். யசோதா தினமும் இரவு தனது அண்ணி ஹேமலதாவோடு செல்போனில் பேசுவார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் யசோதா செல்போனில் ஹேமலதாவை தொடர்பு கொண்டார். நீண்டநேரமாக தொடர்பு கொண்டும் ஹேமலதா செல்போனை எடுக்கவில்லை. இதனால் யசோதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது.

வீட்டின் முன்பக்க அறையில் ஹேமலதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது இடதுபக்க மார்பில் கத்திக்குத்து பலமாக இருந்தது. கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. வீட்டின் படுக்கை அறையில் ஜெயலட்சுமி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. வயிற்றிலும் கத்திக்குத்து காயம் இருந்தது.

இந்த கொடூர காட்சியை பார்த்த யசோதா அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார். சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கமி‌ஷனர் கரன்சின்கா உத்தரவின்பேரில், கூடுதல் கமி‌ஷனர் சங்கர், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் சிங்காரவேலு, உதவி கமி‌ஷனர் சுப்பிரமணி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர். ஹேமலதா, ஜெயலட்சுமி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாலமுருகனே கொலையாளி

அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, பாலமுருகன் தனது தாய் மற்றும் தங்கையுடன் நீண்ட நேரம் சண்டைப்போட்டுவிட்டு, வெளியில் சென்றதாகவும், பின்னர் பிற்பகலில் மீண்டும் வீட்டிற்கு வந்ததாகவும், மாலை 6 மணியளவில் அவர் தனியாக வெளியில் சென்றதாகவும் தெரிவித்தனர்.

கொலை நடந்த வீட்டிற்குள்ளிருந்து பாலமுருகன் சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதனால் அவர் தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. அவரது செல்போன் சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் போலீசார் அவரது செல்போனை தொடர்புகொண்டபோது நீண்டநேரம் மணி ஒலித்தும் அவர் எடுத்துப்பேசவில்லை. செல்போனை ஆய்வு செய்து பாலமுருகன் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அவர் தங்கியிருப்பது தெரியவந்தது.

தற்கொலை முயற்சி

தனிப்படை போலீசார் கேளம்பாக்கத்திற்கு சென்று பாலமுருகன் தங்கியிருந்த லாட்ஜ் அறையை பார்த்தனர். அந்த அறை பூட்டியிருந்தது. இதற்கிடையே கேளம்பாக்கம் அருகே உள்ள கடலில் குதித்து பாலமுருகன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் காப்பாற்றி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரிடம் பாலமுருகன் தனது தாயாரையும், தங்கையையும் கொன்றதை கதறி அழுதபடியே ஒப்புக்கொண்டார். அவரை சென்னைக்கு அழைத்துவந்து சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பரபரப்பு வாக்குமூலம்

விசாரணையில் தனது தங்கையையும், தாயையும் கொடூரமாக கொலை செய்தது ஏன்? என்று பாலமுருகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:–

சைதாப்பேட்டையில் உள்ள குடியிருப்பில் ஒரு ஆண்டுக்கு முன்பு தான் குடியேறினோம். இந்த வீட்டிற்கு வந்த உடன் எனது தந்தை, இறந்துபோனார். எனது தந்தை மீது நான் அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அவர் இறந்த சோகத்தை என்னால் தாங்கமுடியவில்லை. எனக்குள் அடிக்கடி நாமும் உயிர்வாழக் கூடாது என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது.

கோவளத்திற்கு சென்று இரண்டு முறை கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். என்னை காப்பாற்றிவிட்டார்கள். அதற்குப்பிறகு நான் மட்டும் சாகக்கூடாது என்றும், தாய் மற்றும் தங்கையோடு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தேன். எனது முடிவை தாயும் தங்கையும் ஏற்றுக்கொள்ளாமல் என்னை திட்டினார்கள். அதனால் தான் அவர்களை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டேன்.

தந்தை இறந்த சோகம்

முதலில், வீட்டின் முன்பக்க அறையில் தூங்கிக்கொண்டிருந்த எனது தாயாரை சமையல் அறையில் கிடந்த கத்தியால் குத்தி கொலை செய்தேன். கல்லூரிக்கு சென்றிருந்த எனது தங்கை வந்தவுடன் வாயைப்பொத்தி கத்தியால் குத்தினேன். படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டிக்கொள்ள முயன்ற அவளையும் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

எனது தந்தை இறந்த சோகம்தான் எனக்குள் ஒரு வெறியை ஏற்படுத்தி எனது தங்கையையும், தாயாரையும் கொலை செய்யும் அளவிற்கு தூண்டியது.  இவ்வாறு பாலமுருகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மனநோய்க்கு சிகிச்சை

பாலமுருகன் தனது தந்தையின் இழப்பால் ஏற்பட்ட சோகத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்புவோம் என்றும், சிறையில் அவருக்கு டாக்டர்கள், மனநல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story