சென்னை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர்கள், மாநகராட்சி கமி‌ஷனர் பங்கேற்றனர்


சென்னை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர்கள், மாநகராட்சி கமி‌ஷனர் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 27 April 2017 8:48 PM GMT (Updated: 27 April 2017 8:47 PM GMT)

சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

அமைச்சர்கள், மாநகராட்சி கமி‌ஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வுக்கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.பெஞ்சமின், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வார்தா புயலின் போது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டது குறித்தும், சாலை சீரமைப்பு, மின்வினியோகம், தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யப்பட்டு வரும் முறை குறித்தும், அம்மா உணவகம், அம்மா குடிநீர் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தூர்வாரும் பணி

ஆய்வுக்கு பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:–

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சிறுகால்வாய்களை தூர்வாரும் பணி 3 ரோபோடிக் எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. கொசுத்தொல்லையை அறவே நீக்கவும், ஆகாயத்தாமரைகளை அகற்றவும் ஆம்பியன் நவீன எந்திரம் மூலமாக பணிகள் நடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தியாகராயநகர் பகுதி மேம்பாட்டு திட்டத்தில் 23 உட்புற சாலைகள் ரூ.15 கோடி மதிப்பீட்டிலும், 8 பூங்காக்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

தியாகராயநகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம் வடிவமைக்கும் பணி, மாம்பலம் ரெயில் நிலையத்தையும், தியாகராயநகர் பஸ் நிறுத்தத்தையும் இணைக்கும் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி, மிதிவண்டி பகிர்மான பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வார்தா புயல்

அனைத்து தெருவிளக்குகளும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற, 2 லட்சத்து 77 ஆயிரத்து 902 மின்விளக்குகளில் முதற்கட்டமாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 229 தெருவிளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 55 சதவீதம் மின்சிக்கனம் ஏற்பட்டுள்ளது. மேலும், 6 ஆயிரத்து 500 மின்விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வார்தா புயலின்போது விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன. விழுந்த மரங்களுக்கு பதிலாக மண்ணின் தன்மைக்கேற்ப நாட்டு மரக்கன்றுகள் அதிக அளவில் நடப்படுகிறது. இதை முறையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மா குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைத்திடவும், அம்மா உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, சுவை மற்றும் தரம் குறையாமல் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story