கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை கேரளாவில் ஒருவர் கைது


கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை கேரளாவில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 28 April 2017 4:47 AM GMT (Updated: 28 April 2017 4:47 AM GMT)

கொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பாக கேரளாவில் 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு  எஸ்டேட்டில் கடந்த 24-ந்தேதி நடந்த கொலை- கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டிற் குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூரை படுகொலை செய்தனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் ஜெயலலிதாவின் அறைக்குள்
ஜன்னல் கண்ணாடியை உடைத்து  உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தங்க, வைர நகைகள் மற்றும் பணம், சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த அன்று கொடநாடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகி இருந்தன. இதனால் கொள்ளையர்கள் வந்து சென்ற கார் குறித்து உடனடியாக துப்பு துலங்கவில்லை.

முதலில் மர்ம கும்பல் தாக்கியதில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய காவலாளி கிருஷ்ண பகதூர் மீது போலீசாருக்கு முதலில் சந்தேகம் ஏற்பட்டது.  கொலையுண்ட ஓம்பகதூருக் கும்,கிருஷ்ணபகதூருக்கும் முன் விரோதம் இருந்ததாக வும், அதன் காரணமாகவே இக்கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த ரத்தகறை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். காயத்துடன் உயிர் தப்பிய கிருஷ்ண பகதூரை அழைத்து வந்து விசாரித்தனர். போலீசார் அவரது ரத்த மாதிரிகளையும் பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த ரத்த கரையையும்,  உயிர் தப்பிய காவலாளி கிருஷ்ணபகதூரின் ரத்த கரையையும் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் இரண்டும் ஒத்து போகவில்லை. இதன் மூலம் கிருஷ்ணபகதூருக்கு இக்கொலை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக  நீலகிரி மாவட்டம் முழுவதும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.  முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார்  ஆய்வு செய்தனர்.

அப்போது கொடநாடு எஸ்டேட்டுக்குள் 2 கார்கள் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றது தெரியவந்தது. இந்த கார்களில் வந்தவர்கள் தான் காவலாளியை கொன்றுவிட்டு ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் எஸ்டேட், பங்களா நிர்வாகிகள், கொடநாட்டில் முன்பு வேலைபார்த்த டிரைவர், ஊழியர்கள் என சுமார் 100 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினர். கொடநாட்டில் வேலை பார்க்கும் 10 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. கொடநாடு பகுதியில் பதிவான அனைத்து செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே கொள்ளை சம்பவம் நடந்த அன்று சந்தேகத்திற்கிடமாக இனோவா காரை கூடலூர் அருகே போலீசார் மடக்கினர். ஆவணங்கள் இல்லாததால் காரை பறிமுதல் செய்தனர். காருக்கு சொந்தமானவர் கேரளாவில் இருந்து ஆவணங்களை கொண்டு வந்து காட்டி விட்டு காரை எடுத்து சென்றார்.

கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காரும், கூடலூர் அருகே பிடிப்பட்ட காரும் ஒன்றுபோல் இருந்ததால் அதுகுறித்து விசாரிக்க கேரளாவுக்கு ஒரு தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு சம்பந்தப்பட்ட கார் மற்றும் ஒருவரை மடக்கி பிடித்தனர். மேலும் கேரளாவில் 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நடத்திய விசாரணையில் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த கும்பல் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Next Story