சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பி.துரைசாமி பொறுப்பு ஏற்றார்


சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பி.துரைசாமி பொறுப்பு ஏற்றார்
x
தினத்தந்தி 27 May 2017 11:15 PM GMT (Updated: 27 May 2017 7:09 PM GMT)

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பி.துரைசாமி பொறுப்பு ஏற்றார்.

சென்னை,

பட்டமளிப்பு விழாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

துணைவேந்தர்கள்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ரா.தாண்டவன் கடந்த ஆண்டு ஜனவரி 17–ந்தேதியோடு ஓய்வு பெற்றார். இதேபோல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த மு.ராஜாராம், பதவிக்காலமும் கடந்த ஆண்டு மே 26–ந்தேதியோடு நிறைவடைந்தது.

இதேபோல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தன. எனவே பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

நியமனம்

இதையடுத்து துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நேர்காணல் பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

அதன்படி சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் பி.துரைசாமியையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் செல்லத்துரையையும் கவர்னர் நியமித்து நேற்று உத்தரவிட்டார். அதற்கான நியமன ஆணையையும் ராஜ்பவனில் அவர்களிடம் கவர்னர் வழங்கினார்.

பொறுப்பு ஏற்பு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பி.துரைசாமி நேற்று மாலை பொறுப்பு ஏற்றார். அவருக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராகவும், பொருளாதாரத்துறை தலைவராகவும், பதிவாளராகவும் பி.துரைசாமி பணியாற்றியவர்.

பதவி ஏற்ற பின்னர் பி.துரைசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவது தொடர்பான அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.


Next Story