ஜனாதிபதி தேர்தல்: சசிகலா கூறுவதுபடி செயல்படுவோம்; டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்


ஜனாதிபதி தேர்தல்:  சசிகலா கூறுவதுபடி செயல்படுவோம்; டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 22 Jun 2017 10:15 PM GMT (Updated: 22 Jun 2017 5:41 PM GMT)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சசிகலா கூறுவதுபடியே செயல்படுவோம் என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தெரிவித்துள்ளனர். டி.டி.வி.தினகரன் தலைமையில் இயங்கிவரும் எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்ப நிலையில் இருந்தனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அ.தி.மு.க.(அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வீட்டில் நேற்று செந்தில்பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், கருணாஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முன்னாள் அரசு கொறடா திருச்சி மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் சி.த.செல்லபாண்டியன், புத்திசந்திரன் உள்ளிட்டோர் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் அணியினரும் பா.ஜ.க. வேட்பாளரையே ஆதரிப்பார்கள் என தெரிகிறது. எனினும் இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசிய பிறகே உரிய முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியதாவது:–

பெங்களுரூ சிறையில் சசிகலாவை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசிய மறுநாளே பா.ஜ.க.வுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் ஆலோசனையின் பேரில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? என்பது எங்களுக்கு தெரியாது.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால் அந்த கூட்டணியை நாங்கள் நிச்சயம் ஆதரிக்கப்போவது இல்லை. மாற்று இருப்பது பா.ஜ.க. கூட்டணி தான். எனினும் எங்களுடைய ஆதரவு யாருக்கு என்பது, சசிகலா எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அமையும். இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் சசிகலாவை ஒரு சில தினங்களில் சந்தித்து பேச உள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

கருணாஸ் எம்.எல்.ஏ. கூறும்போது, ‘‘என்னை பொறுத்தவரை பொது செயலாளர் சசிகலா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் சசிகலா கூறுவதுபடியே செயல்படுவோம்’’ என்றார்.


Next Story