வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா:தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா:தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 23 Jun 2017 11:45 PM GMT (Updated: 23 Jun 2017 6:46 PM GMT)

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், யாருடைய பெயரையும் குறிப்பிடாதது ஏன்? என்று போலீசாருக்கு கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு, இதுதொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பி.வைரக்கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது, அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆட்கள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வாரி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ரூ.90 கோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆதார ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தலை, இந்திய தேர்தல் கமிஷன் தள்ளிவைத்து, ஏப்ரல் 10-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனால், இதன்பின்னர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த டி.டி.வி.தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தேன்.

அதற்கு பதிலளித்த இந்திய தேர்தல் கமிஷன், ‘அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஏப்ரல் 18-ந்தேதி உத்தரவிட்டுள்ளதாக’ கூறியிருந்தது.

ஆனால், இதுவரை போலீசில் புகார் செய்யவும் இல்லை. போலீசார் வழக்குபதிவு செய்யவும் இல்லை. எனவே, போலீசில் புகார் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு கடந்த 19-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி, முதல் தகவல் அறிக்கையை, கோர்ட்டில் தேர்தல் கமிஷனின் வக்கீல் தாக்கல் செய்தார்.

ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையில், யாருடைய பெயரும் குறிப்பிடவில்லை என்று மனுதாரர் வக்கீல் கூறினார். இதையடுத்து, பண பட்டுவாடா குறித்து போலீசில் புகார் செய்யும்படி இந்திய தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பிய 34 பக்க அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் வக்கீலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதேபோல, பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை குறித்து ஆவணத்தை (கேஸ் டைரியை) கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீஸ் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது 34 பக்க அறிக்கையை தேர்தல் கமிஷனின் வக்கீல் நிரஞ்சன், மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்தார். அதேபோல, ‘கேஸ் டைரியை’ தமிழக அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி தாக்கல் செய்தார். இந்த 2 ஆவணங்களையும் நீதிபதிகள் படித்து பார்த்தனர்.

பின்னர், “வருமான வரித்துறை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்த ஆவணங்களில் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 3 பேருடைய பெயர்களை தேர்தல் கமிஷன் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, பெயரை குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கையை போலீசார் ஏன் பதிவு செய்தனர்?” என்று கேட்டனர்.

அப்போது மனுதாரர் வக்கீல் வி.இளங்கோவன், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்திய தேர்தல் கமிஷன் எங்களுக்கு அளித்த பதிலில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பெயர் இருந்தது. அதை முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிடவில்லை’ என்று கூறினார்.

இதையடுத்து, நீதிபதிகள் ‘இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக கூறினார்கள். அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி இந்திய தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, விசாரணையை வருகிற ஜூலை 14-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story