சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, கடைசி வரை பதில் அளிக்காத அமைச்சர்


சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, கடைசி வரை பதில் அளிக்காத அமைச்சர்
x
தினத்தந்தி 23 Jun 2017 11:30 PM GMT (Updated: 23 Jun 2017 6:57 PM GMT)

சட்டசபையில் மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு, கடைசி வரையிலும் அமைச்சர் பதில் அளிக்கவில்லை.

சென்னை,

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறினீர்கள். மதுரையில் கூட ஆர்ப்பாட்டம் நடந்ததாக கேள்விப்பட்டேன். எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எந்த இடத்தில் அமைக்கப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன்’ என்றார்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி அதற்கான அறிவிப்பை ஜெயலலிதா பெற்றார். 19.7.2014-ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு பெறப்பட்டது. இதற்காக செங்கல்பட்டு, பெருந்துறை, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடங்களில் 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக பிரதமரிடம், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் பல விவரங்களை மத்திய அரசு எங்களிடம் கேட்டுள்ளது. அவர்கள் கேட்கும் விவரங் களை தொடர்ந்து நாங்கள் அனுப்பி வருகிறோம். எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக அமையும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அமைச்சர் பேசி முடித்த பிறகு தி.மு.க. உறுப்பினர்கள், எந்த இடம், எந்த இடம் என்று குரல் எழுப்பினர். அதற்கு அமைச்சர் சிரித்து கொண்டே இருக்கையில் அமர்ந்து கொண்டார். எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமையும் என்ற மு.க.ஸ்டாலின் கேள்விக்கு கடைசி வரை அமைச்சர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story