கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2017 10:45 PM GMT (Updated: 23 Jun 2017 7:20 PM GMT)

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொது நலமனுவில் கூறியிருப்பதாவது:-

வைகை ஆற்றங்கரை நாகரிகம் குறித்து கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் சங்ககால நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடியில் 3-ம் கட்ட ஆய்வுப்பணியை தொடங்கும் நிலையில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், அசாம் மாநிலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஜோத்பூரில் தொல்லியல் பொருட்கள் பாதுகாவலராக பணியாற்றிய ஸ்ரீராமன் கீழடியில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீராமன், 15 ஆண்டுகளாக தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வந்துள்ளார். இவருக்கு அகழாய்வு பணியில் போதிய அனுபவம் இல்லை. அகழாய்வு பணியில் முக்கியமான பணி பழங்கால பொருட்களின் உண்மையான காலத்தை கண்டறிவது (ரிப்போர்ட் ரைட்டிங்) ஆகும். இதில் தற்போதைய கண்காணிப்பாளருக்கு அனுபவம் கிடையாது.

அகழாய்வு பணியில் சிறப்பாக செயல்பட்ட கண்காணிப்பாளர் இடமாறுதல் செய்யப்பட்டிருப்பது வரலாற்றை மறைக்கும் முயற்சி என கருதப்படுகிறது. எனவே அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வு பணியை தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், கீழடியில் 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழ்வாய்வு பணியை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி வாதிடும்போது, ‘கீழடி அருகே அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. விதிப்படி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மத்திய அரசு தான் மேற்கொள்ளும். தேவையெனில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கவும் தயாராக உள்ளோம் என்றார்.

அப்போது, “கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது. அப்படியிருக்கும் போது அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை தயங்குவது ஏன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதில் தொல்லியல் துறைக்கு ஆட்சேபம் உள்ளதா என்றும் நீதிபதிகள் கேட்டனர். இதற்கு சிவகங்கை மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்க ஆட்சேபம் இல்லை. ஆனால், உடனடியாக அருங்காட்சியகத்தில் பொருட்களை வைக்க முடியாது. அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களின் ஆய்வு முடித்து, அறிக்கை பெறப்பட்ட பிறகே அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தொல்லியல் துறை வக்கீல் பதிலளித்தார்.

தொடர்ந்து கீழடியில் எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களில் இதுவரை எடுத்த பொருட்கள் எங்கு உள்ளன என நீதிபதிகள் கேட்டதற்கு, “50 சதவீத பொருட்கள் கீழடியிலும், எஞ்சிய பொருட்கள் பெங்களூருவிலும் உள்ளன” என தொல்லியல் துறை வக்கீல் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. அருங்காட்சியகம் அமைப்பதில் தமிழக அரசின் பங்கும் இருக்க வேண்டும். இடம் மட்டும் கொடுத்தால் போதாது வேறு பல உதவிகளையும் மாநில அரசு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

பின்னர், கீழடியில் தமிழக அரசு ஒதுக்கும் இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அத்துடன் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் தொடர்பாக, மத்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜெனரல், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலர், தமிழக தொல்லியல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Next Story