திருப்போரூர் அருகே சிவன் கோவிலில், ரூ.2 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் கொள்ளை


திருப்போரூர் அருகே சிவன் கோவிலில், ரூ.2 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் கொள்ளை
x
தினத்தந்தி 24 Jun 2017 9:37 PM GMT (Updated: 24 Jun 2017 9:37 PM GMT)

திருப்போரூர் அருகே சிவன் கோவிலில் ரூ.2 கோடி மதிப்புடைய மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருப்போரூர்,

திருப்போரூரை அடுத்த இள்ளலூர் கிராமத்தில் இருந்து ஈச்சங்காடு செல்லும் சாலையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது.  நேற்று காலை 6 மணியளவில் இந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட கிராம மக்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கோவிலில் இருந்த ஒரு அடி உயரம் உள்ள மரகதலிங்கம் மட்டும் கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.  கொள்ளை போன அந்த மரகதலிங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்களது கைரேகை படாமல் இருக்க கோவில் பூட்டை உடைத்து விட்டு தாழ்ப்பாளில் எண்ணெய் தடவி உள்ளனர். கோவிலுக்குள் இருந்த 2 ஐம்பொன் சிலைகளை விட்டு விட்டு அந்த மரகதலிங்கத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிந்திருந்த கைரகைகளை பதிவு செய்தனர். இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த கோவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவராக இருந்த இந்த ஒரு அடி மரகத சிலை அகற்றப்பட்டு புதிதாக ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அகற்றப்பட்ட சிலை ஒருமூலையில் மற்ற பொருட்களுடன் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது கும்பாபிஷேகத்திற்கு வந்த சாமியார் ஒருவர் இந்த சிலை பல கோடி மதிப்புள்ளது. அதை பாதுகாப்பில்லாமல் ஒரு மூலையில் போட்டு வைத்துள்ளர்களே என கூறியதையடுத்து தான் அந்தசிலை மரகதலிங்கம் எனவும் பல கோடி மதிப்புள்ளது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மூலவர் பகுதியில் ஒரு பக்கத்தில் அந்த சிலையை வைத்து வழிபாடு செய்து வந்து உள்ளனர். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மேற்பார்வையில் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story