வாரிசு அரசியலை புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்-எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள்


வாரிசு அரசியலை புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்-எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள்
x
தினத்தந்தி 28 Jun 2017 7:24 AM GMT (Updated: 28 Jun 2017 7:55 AM GMT)

வாரிசு அரசியலை அ.தி.மு.க.விற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம். அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூறினார்.

சென்னை

சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக இருக்கிறார். சசிகலா சிறை சென்ற பிறகு அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை ஏற்றார்.

தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் பணிகளை கவனிக்கும் பொறுப்பை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். வழக்கில் ஜாமீன் பெற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.

யார் தலைமையில் இயங்குவது? என்பதில் அ.தி.மு.க. (அம்மா) அணியில் தினகரன்–எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே மெல்ல, மெல்ல பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.

தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று கொண்டு இருந்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்) ராமச்சந்திரன் (குன்னம்), கனகராஜ் (சூலூர்), சண்முகம் (கிணத்துக்கடவு), பாண்டியன்  (சிதம்பரம்), கஸ்தூரி வாசு (வால்பாறை) அம்மன் அர்ஜுன் (கோவை தெற்கு) ஆகியோர் கூட்டாக வெளியில் வந்தனர்.
அப்போது முருகுமாறன்,  ராமச்சந்திரன் ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு:-

அ.தி.மு.க.வை அழிக்கக்கூடிய யாரும் கட்சியில் இல்லை.பொதுச்செயலாளரை பொது உறுப்பினர் தேர்ந்தெடுக்க வேண்டும். வாரிசு அரசியலை அ.தி.மு.க.விற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம். வெற்றிவேல் எந்த அடிப்படையில் புறக்கணித்தாரோ அதே அடிப்படையில்தான் நாங்களும் செல்கிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் படம், பெயரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த அடிப்படையில் வெற்றிவேல் புறக்கணித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் அந்த அணியில் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.


Next Story