ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையை வெளியிட்ட அ.தி.மு.க. நாளிதழ்


ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையை வெளியிட்ட அ.தி.மு.க. நாளிதழ்
x
தினத்தந்தி 27 July 2017 10:30 PM GMT (Updated: 27 July 2017 7:05 PM GMT)

ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையை நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியிட்டு, இரு அணிகளின் இணைப்புக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை, 

ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு என்ற தலைப்பில் விழா ஒன்றில் மறைந்த ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையை நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியிட்டு, இரு அணிகளின் இணைப்புக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. (அம்மா) அணியாகவும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியாகவும் 2 ஆக பிரிந்தது. இரு அணிகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளே குழப்பம் ஏற்பட்டு, எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலையையும், வேறு சிலர் டி.டி.வி. தினகரன் ஆதரவு என்ற நிலையையும் எடுத்தனர்.

அ.தி.மு.க. (அம்மா) கட்சி பணியில் இருந்து ஒதுங்கிய டி.டி.வி. தினகரன், 60 நாட்கள் வரை தான் பொறுத்து இருப்பேன் என்றும், அதன்பிறகும் கட்சி இணைப்பு பணி நடக்காவிட்டால், தீவிரமாக கட்சி பணியில் இறங்குவேன் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு கெடு விதித்து இருந்தார். இந்த கெடு வரும் 5-ந்தேதியுடன் முடிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில், மறைந்த ஜெயலலிதா விழா ஒன்றில் கூறிய நண்டு குட்டிக்கதை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த கதையின் தலைப்பு, ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு என்பது தான்.

இந்த கதையின் சுருக்கம் ஒற்றுமையாக இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பது தான்.

இந்த குட்டிக்கதையை நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் வெளியிட்டு இருப்பதன் மூலம் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தால் அனைவருக்கும் (இரு அணி நிர்வாகிகளுக்கு) வாழ்வு கிடைக்கும் என்பதாகவும் இருந்தது.

இதன்மூலம் இரு அணிகளின் இணைப்புக்கு நமது எம்.ஜி.ஆர். மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது. நமது எம்.ஜி.ஆர். தற்போது டி.டி.வி. தினகரன் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story