செல்போன் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்கு அலைக்கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு


செல்போன் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்கு அலைக்கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Sep 2017 9:15 PM GMT (Updated: 23 Sep 2017 7:38 PM GMT)

செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

சென்னை,

இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மூலம் சமூக விரோதிகள் மற்றும் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் எண்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆதார் எண்ணை செல்போன் நிறுவனங்கள், சிறிய செல்போன் கடைகளில் பொதுமக்கள் இணைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், இதில் பொதுமக்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாகவும், செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி, சென்னை அடையாரை சேர்ந்த கே.வெங்கடேசன்(வயது 61) என்பவர், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள நான் பயன்படுத்தி வரும் ‘சிம்கார்டு’ நிறுவனத்தின் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். அப்போது, எனது கைரேகை பொருந்தவில்லை என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.

பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, கைரேகை பொருந்தாவிட்டால் என்ன? உங்கள் கண் கருவிழி மற்றும் முகத்தையும் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளோம் அவற்றை வைத்து செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என கூறினர். மீண்டும் அந்த நிறுவனத்துக்கு சென்று இதுபற்றி கூறியபோது, அவர்கள் அதற்கு கூடுதல் செலவாகும் எனவே ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

எனக்கு தற்போது 61 வயதாகிவிட்டதால் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்தும் வயதானவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் இந்த பிரச்சினை ஏற்படும். எனவே எங்களை போன்ற வயதானவர்களை அலைக்கழிக்காமல் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story