200 குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள ரேஷன் கடைகள் கணக்கெடுப்பு


200 குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள ரேஷன் கடைகள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 25 Sep 2017 9:15 PM GMT (Updated: 25 Sep 2017 7:16 PM GMT)

நிதிச்சுமையை தவிர்க்க 200 குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள ரேஷன் கடைகளை கணக்கெடுத்து அருகில் உள்ள கடைகளுடன் இணைக்க பரிசீலனை நடந்து வருகிறது.

சென்னை, 

சென்னை மண்டல இணைப் பதிவாளர்கள் உள்பட அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு நுகர்வோர் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுவினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில், புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கிராமப்புறம் மற்றும் நகர்புற பகுதியில் குறைந்தபட்சம் 150 குடும்ப அட்டைகள் இருக்க வேண்டும். தாய் கடைக்கும், பகுதி நேர ரேஷன் கடை கோரும் பகுதிக்கும் குறைந்தது 1½ கி.மீ. தூரம் இருக்க வேண்டும். பகுதி நேர ரேஷன் கடை அமையவிருக்கும் பகுதிகளில் அரசு கட்டிடம் அல்லது பஞ்சாயத்து கட்டிடம் இருக்க வேண்டும்.

மலை பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க குறைந்தபட்சம் 100 குடும்ப அட்டைகள் இருக்க வேண்டும். தாய் கடைக்கும், பகுதி நேர ரேஷன் கடை கோரும் பகுதிக்கும் குறைந்தது 1 கி.மீ. தூரம் இருக்க வேண்டும்.

கணக்கெடுப்பு

சில பகுதி நேர ரேஷன் கடைகளில் 150 குடும்ப அட்டைகளுக்கும் கீழ் உள்ளன. சில பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு வாடகை உள்ளிட்ட செலவினங்கள் கூட்டுறவு சங்கங்களால் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நிதிச்சுமை அதிகரிக்கிறது.

இதனை தவிர்க்க 200 குடும்ப அட்டைகளுக்கு கீழ் செயல்படுகின்ற முழு நேர ரேஷன் கடைகள் மற்றும் 100 குடும்ப அட்டைகளுக்கு கீழ் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடைகளை கணக்கெடுத்து கள ஆய்வு செய்து, வாய்ப்புகள் இருப்பின் அதன் தாய் ரேஷன் கடை அல்லது அருகில் உள்ள ரேஷன் கடையோடு இணைப்பது குறித்து பரிசீலனை செய்து விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story