தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றபோது டெங்கு காய்ச்சலுக்கு சென்னை என்ஜினீயர் பலி


தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றபோது டெங்கு காய்ச்சலுக்கு சென்னை என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 19 Oct 2017 9:45 PM GMT (Updated: 19 Oct 2017 8:42 PM GMT)

தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றபோது, சென்னை என்ஜினீயர் டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் வந்தியதேவன் (வயது 25). இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தியதேவன் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தண்டராம்பட்டுக்கு வந்தார். திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமானதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வந்தியதேவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது டாக்டர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக வேலூருக்கு அழைத்து செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

பின்னர் வந்தியதேவனை வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வந்தியதேவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.மழவராயனூரைச் சேர்ந்தவர் அமுல்தாஸ். இவர் சென்னை முகப்பேரில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் விமலா (10). முகப்பேரில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விமலா எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி (23). எம்.சி.ஏ. படித்துள்ள பிரீத்தி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் சவேரியார்பாளையத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஜெயசீலன் (17), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயர் பழனிவேல் என்பவரது மனைவி கர்ப்பிணி பெண் சங்கீதப்பிரியா (22), ராசிபுரம் டவுன் வி.நகர் பாப்பாத்தி காடு பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் விஷ்ணுபிரகாஷ் (11), எருமப்பட்டி புதுக்கோம்பையைச் சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவன் பிரவீன் (6) ஆகியோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர்.

இதேபோல் மதுரை மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story