நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் பிடித்தனர்


நாமக்கல் அருகே  வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் பிடித்தனர்
x
தினத்தந்தி 14 Dec 2017 11:38 AM GMT (Updated: 14 Dec 2017 11:38 AM GMT)

கோவையில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக, வட மாநில கொள்ளையர்களை போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர்.

நாமக்கல்,

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து 200 -ஐ கொள்ளையடித்து சென்றனர்.

அதுபோல் அன்று இரவு பீளமேட்டில் தனியார் கல்லூரி அருகே உள்ள ஆக்சில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அன்று அதிகாலை 1.15 மணிக்கு தண்ணீர் பந்தல் ரோட்டில் இன்டஸ்இன்ட் வங்கி ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து ரூ.3.5 லட்சத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.

போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள் தான் என்பது தெரியவந்தது.

இந்த கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 6 பேர் நாமக்கல்  வழியாக  வட மாநிலங்களுக்கு தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடியில் கோவை மற்றும் நாமக்கல்லை சேர்ந்த போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 5 மணி அளவில் வெளிமாநில பதிவு எண் கொண்ட இரண்டு சொகுசு கார்களை போலீசார் மடக்கி பிடித்தனர். முதலில் வந்த  காரில்  2 பேரை விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரனாக இந்தியில் பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்  2 பேரை கைது செய்து  காரை பறிமுதல் செய்தனர். பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.  அந்த காரை போலீசார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். எனினும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக் குட்டைமேடு என்ற இடத்தில் உள்ள  இந்தியன் வங்கி ஏ.டி.எம் அருகில் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த 3 பேரும்  வெவ்வேறு  திசைகளில் தப்பி ஓடினர்.  

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் ஏரளமாள போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் 2-க் கும் மேற்பட்ட டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 50க்கும் மேற்பட்ட போலீசார் பொம்மைகுட்டை  மேடு, மேற்கு பாலப்பட்டி மற்றும் சுற்றுவட்டார  பகுதியில் துப்பறியும்  மோப்பநாய் உதவியுடன்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது  துப்பறியும் மோப்பநாய்  ஒன்று கொள்ளையனின்  கால் தடத்தை மொப்பம் பிடித்தது கொண்டு ஓடியது. மேற்கு பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு  மோப்ப நாய்  ஓடி சென்று  நின்றது.  

அந்த  வீட்டின்  மேல் மொட்டை மாடியில்  கொள்ளையன் ஒருவன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவனை பிடிக்க போலீசார் முதலில்  வீட்டை  சுற்றி வளைத்தனர். அந்த வீட்டை சுற்றிலும் ஏராளமான வீடுகள் நிறைந்திருந்ததால் உடனடியாக வீட்டுக்குள் சென்றால் வேறு  வீட்டுக்குள்  புகுந்து தப்பி சென்று விடுவான் என கருதி போலீசார் உடனடியாக வீட்டுக்குள்  செல்லவில்லை. அது மட்டுமல்லாமல் கொள்ளையன்  கையில்  ஏதேனும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

இதனால்  போலீசார் அந்த கொள்ளையனுடன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  கொள்ளையனிடம் வீட்டில் இருந்து கீழே  இறங்கி வருமாறும், நாங்கள் உன்னை எதுவும் செய்ய மாட்டோம். பயப்பட வேண்டாம், ஆயுதங்கள் ஏதுவும் இருந்தால் ஒப்படைத்து விடும்படி போலீசார் கூறினார்கள். ஆனால், வீட்டின் மேல் பகுதியில் இருந்து கொள்ளையன் வெளியே வர மறுத்து விட்டான். 

இதையடுத்து போலீசாரும் பொதுமக்களும் சேர்ந்து அதிரடியாக  வீட்டுக்குள்  சென்று  அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனது பெயர் சுபேதரன் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய மற்ற எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. கொள்ளையன் சுபேதரன் அங்கு தயார் நிலையில் வைத்திருந்த ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு தப்பி விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடிய மற்ற 2 கொள்ளையர்களும் எங்காவது பதுங்கி இருக்கிறார்களா? என போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டனர். மேற்கு  பாலப்பட்டி காட்டு பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்தை சுற்றி வளைத்து 2 கொள்ளையர்களையும் கைது செய்தனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சினிமாவில் வரும் காட்சிகள் போல் அதிரடியாக  இருந்தது. அடுத்தடுத்து என்ன நடக்கிறதோ? என்பது போன்ற பரபரப்பும் பதட்டமும் நிறைந்து  காணப்பட்டது.

போலீசார்  கொள்ளையர்களை பிடிக்கும் ஒவ்வொரு அதிரடி நடவடிக்கைகளும், வியூகங்களையும் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். வடமாநில கொள்ளையர்களை போலீசார் விரட்டிச் சென்று  மடக்கி   பிடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story