ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் தொழிலாளர்கள் போராட்டம்


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2017 12:15 AM GMT (Updated: 15 Dec 2017 10:51 PM GMT)

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப் படுகிறது.

சென்னை,

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.8 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதால், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கிடையே, 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்த வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தமும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதற்கிடையே, அரசின் பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போக்குவரத்து கழக ஊழியர்கள் முன்வைத்தனர். தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதிய பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்த போதிலும், அதற்கு பலன் இல்லை.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த செப்டம்பர் மாதம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தனர். பின்னர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதியை ஏற்று வேலை நிறுத்த நோட்டீசை தொழிற்சங்க நிர்வாகிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். ஆனால், அமைச்சர் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ம.தொ.மு.ச. உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகம் முழுவதும் 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு சாமியானா பந்தல் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தொழிற்சங்கத்தினர் விதித்த 48 மணி நேர ‘கெடு’ முடிவதற்கு முன்பாகவே, சென்னையிலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் நேற்று போக்கு வரத்து தொழிலாளர்கள் சிலர் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.

சென்னையில் டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுப்பு எடுத்துவிட்டு பல்லவன் இல்லம் நோக்கி படையெடுத்தனர். இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் பணிமனையிலேயே முடங்கின. வடபழனி, கே.கே.நகர், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு டெப்போக்களில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்களும் ஓடவில்லை. இதனால் வெளியூர் செல்ல இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில், பஸ்கள் ஓடாததால் பல பஸ் நிலையங்களில் அதிக அளவிலான பொதுமக்கள் காத்து இருந்தனர். 40 சதவீதத்துக்கும் குறைவான அளவு பஸ்களே இயங்கியதால், பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அலுவலகங்களுக்கு சென்றவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டனர். குறைவான பஸ்களே இயக்கப்பட்டதால் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் கடலூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், ஈரோடு, கோவை, தேனி, திருச்சி, புதுக்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பஸ்கள் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. சில இடங்களில் தொழிலாளர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் சிரமப்பட்டனர்.

நிலைமை மோசம் அடைந்ததால், போராட்டம் அறிவித்த மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. செயலாளர் ஆறுமுக நயினார் உள்பட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த 12 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை பிற்பகல் 1.30 மணி முதல் 2.15 மணி வரை 45 நிமிடங்கள் நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், “எங்களுடைய கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசிய பின்னர் முடிவை அறிவிப்போம்” என்றார்.

அதன்பின்னர், அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பல்லவன் இல்லத்திற்கு வந்தனர். அமைச்சருடன் பேசியது குறித்து தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் தொழிலாளர்களிடம் விளக்கி பேசினார். அவர், “நம்முடைய கோரிக்கைகளை அமைச்சரிடம் முன் வைத்தோம். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி எழுத்துப்பூர்வமாக உறுதி தர அமைச்சர் மறுத்துவிட்டார். அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. எனவே, நம்முடைய போராட்டத்தை முடித்துக்கொள்வோம்” என்று கூறினார்.

ஆனால் இதற்கு சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் மாலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு பஸ்கள் ஓடத் தொடங்கின. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் வழக்கம் போல் புறப்பட்டு சென்றன.

Next Story