ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார்


ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார்
x
தினத்தந்தி 29 Dec 2017 8:55 AM GMT (Updated: 29 Dec 2017 8:55 AM GMT)

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். #TTVDhinakaran #RKNagarMLA #AssemblySpeaker #Dhanapal

சென்னை, 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். அவர் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்து 3-வது இடத்தை பிடித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் நேற்று பெங்களூர் அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேசினார். தினகரன் இன்று  எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். இதற்கான நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்தது.  அவருக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதையொட்டி அவரது ஆதரவாளர்கள் காலை 11 மணியளவில் இருந்தே தலைமை செயலகம் முன்பு குவிய தொடங்கி விட்டனர். அவர்கள் பேண்டு வாத்தியங்கள் இசைத்து ஆராவாரம் செய்தனர்.

இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். முக்கிய நிர்வாகிகளை மட்டுமே போலீசார் கோட்டைக்குள் அனுமதித்தனர். தொண்டர்கள் யாரை யும்  அனுமதிக்கவில்லை. அவர்கள் சாலையின் இருபுறமும் பதாகையுடன் நின்று தினகரனை வரவேற்றனர்.

தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்ட உமாமகேஸ்வரி, கருணாஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருச்சி மனோகரன், அம்பத்தூர் வெங்கடாசலம், பசும்பொன் மக்கள் கழக தலைவர் இசக்கிமுத்து, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னை கோட்டைக்கு அமைச்சர்கள் அனைவரும் காலை 11 மணியளவில் வருவார்கள், மாலையில் திரும்புவார்கள். ஆனால் இன்று கோட்டைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் வரவில்லை. தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதால் அவர்கள் தலைமை செயலகத்துக்கு வரவில்லை. தர்மசங்கடத்தை தவிர்ப்பதற்காக அவர்கள் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் கோட்டை வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழக சட்டசபை வருகிற 8ந்தேதி கூடுகிறது. அப்போது முதல் முறையாக தினகரன் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Next Story