ஆண்டாள் கருத்து குறித்த சர்ச்சை: ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கருத்து தெரிவிக்காதது ஏன்? -வைரமுத்து பேட்டி


ஆண்டாள் கருத்து குறித்த சர்ச்சை: ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கருத்து தெரிவிக்காதது ஏன்? -வைரமுத்து பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2018 11:45 PM GMT (Updated: 20 Jan 2018 9:33 PM GMT)

தினத்தந்தி நிருபருக்கு கவிஞர் வைரமுத்து சிறப்பு பேட்டி அளித்தார். #vairamuthu #andal #rajini #kamal

சென்னை,

 தினத்தந்தி நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-ஒரு பகுத்தறிவாளராகிய நீங்கள் ஆண்டாள் குறித்து எழுத வேண்டிய அவசியம் என்ன?

பதில்:-ஆண்டாள் தமிழச்சி. அவள் பாடிய அழகுதமிழ், பக்திக்கு மட்டும் சொந்தமில்லை; பகுத்தறிவுக்கும் சொந்தம். எனக்கு ஆண்டாளும் தமிழ் சொல்லிக்கொடுத்த தாய்தான். அம்மா அங்கம்மாள் தாய்ப்பால் கொடுத்தார்; ஆண்டாள் போன்ற பெண் கவிகள் எனக்குத் தமிழ்ப்பால் கொடுத்தார்கள். ஆண்டாள் பற்றி மட்டும் நான் தனியாக எழுதவில்லை. சில ஆண்டுகளாக நான் ஒரு செம்பணி செய்து வருவதாகக் கருதிக்கொள்கிறேன். மூவாயிரம் ஆண்டு பரந்து கிடக்கும் தமிழின் பெருவெளியில் பெரும்பங்களித்த பேராளுமைகளை தமிழுக்குத் தடம் அமைத்தவர்களை ஆய்வு செய்து ஒரே நூலில் கொண்டுவரும் அரிய பணிதான் அது.

உலகத் தமிழர்களையும் இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறையையும் தமிழை நோக்கி ஆற்றுப்படுத்த வேண்டுமென்பதே நோக்கம் என்பதால் இந்தப் பெருந்தொகுப்புக்குத் ‘தமிழாற்றுப்படை’ என்று தலைப்பு வைத்திருக்கிறேன். அந்தத் தலைப்பையும் ஆண்டாளை அரங்கேற்றிய ராஜபாளையத்தில்தான் அறிவித்தேன். திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதர், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று 12 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நாயன்மார்களில் அப்பரைத் தேர்வு செய்த நான் ஆழ்வார்களில் ஆண்டாளைத் தேர்வு செய்தேன். ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே நான் மயங்கிய தமிழ் ஆண்டாள் தமிழ்தான். என் கல்லூரிக்காலங்களிலிருந்து 40 ஆண்டுகளாய் எனக்குள் குலவையிட்டுக் கும்மியடித்துக்கொண்டிருக்கும் ஆண்டாளை எழுது எழுது என்று என் அடிமனம் பணித்தது; எழுதினேன்.

ஆய்வுப்பார்வை

கேள்வி:-ஆய்வுப் பார்வை என்கிறீர்களே. ஆண்டாளை எந்த ஆய்வு நோக்கில் பார்த்தீர்கள்?

பதில்:-காலம், சமூகம், சமயம் என்ற மூன்று தளங்களில் நின்று ஆண்டாளை ஆய்வு செய்தேன். மு.ராகவையங்காரின் ஆராய்ச்சி அடிப்படையில் ஆண்டாள் காலம் 8-ம் நூற்றாண்டின் மையம் என்று புரிந்துகொண்டேன். அந்தச் சமூகம் நிலவுடைமைச் சமூகம், ஆணாதிக்கச் சமூகம், சாதிக் கட்டமைப்புள்ள சமூகம் என்று அறிந்துகொண்டேன். பவுத்த, சமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு சைவம், வைணவம் இரண்டும் தலை தூக்கி நின்ற தருணம் என்று சமயத்தைப் புரிந்துகொண்டேன். இப்படி மூன்று கண்களில் விழித்துக்கொண்டு பார்த்தபோது ஆண்டாள் ஆச்சரியமாகத் தென்பட்டாள். தமிழால் விண்ணுக்கும் மண்ணுக்கும் அவள் விசுவரூபம் காட்டி நின்றாள்.

கேள்வி:-ஆண்டாளை நீங்கள் பெருமைப்படுத்தியாகச் சொல்கிறீர்களே. ஆதாரம் என்ன?

பதில்:-அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு சொல்லும் ஆதாரம். பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8-ம் நூற்றாண்டில் பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆனாள் ஆண்டாள் என்று கொண்டாடியிருக்கிறேன். தமிழ் இலக்கியப் பரப்பில் கேட்ட முதல் பெண் விடுதலைக் குரல் ஆண்டாளுடையது என்று கூவிக் கூவிச் சொல்லியிருக்கிறேன். என் மணவாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்குத்தான் என்று உறுதிகொண்ட ஒருத்தியின் முதல் குரல் இதுவென்று பதிவிட்டிருக்கிறேன். உன்னித்தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்ற ஆண்டாளின் அறைகூவலை ஒலித்திருக்கிறேன்.

‘மாலிருஞ்சோலைஎம் மாயற்கல்லால் மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன்’ என்று சொன்னது ஒரு சுதந்திரப் பெண்ணின் சொல் விடுதலை என்று சூளுரைத்திருக்கிறேன். பதினொரு ஆணாழ்வர்களைவிடவும் ஒரே ஒரு பெண்ணாழ்வாராகிய ஆண்டாளின் பாசுரத்தில் தான் மொழியின் குழைவும், தமிழின் அழகும், உணர்ச்சியின் நெகிழ்வும், உண்மையின் தொனியும் வீறுகொண்டு வினைப்படுவதை எடுத்துக்காட்டியிருக்கிறேன். பிற ஆழ்வார்களின் பக்தி மேட்டுமடை ஒக்கும்; ஆண்டாளின் பக்தியோ பள்ளத்துமடை ஒக்கும் என்ற வைணவாச்சாரியார்களின் மேற்கோளைச் சுட்டியிருக்கிறேன்.

கடவுளின் அடிமை என்பது தான் தேவதாசி

கேள்வி:-இந்த வரியை மேற்கோள் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

பதில்:-இந்தக் கட்டுரையில் காரிக்கண்ணனார், சாமிக்கண்ணுப்பிள்ளை, மு.ராகவையங்கார், தொண்டரடிப் பொடியாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், வைணவாச்சாரியார்கள், கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் ஓஷோ ஆகியோரை மேற்கோள் காட்டியிருக்கிறேன். அந்த வரிசையில் ஆண்டாள் குறித்து ஆராய்ச்சிப் பேராசிரியர் சொன்ன ஒரே ஒரு வரியையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

தேவதாசி என்பது மிக உயர்ந்த பொருள். நான் கடவுளின் மனையாட்டி; கடவுளுக்கே சொந்தம்; கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வேன்; நான் கடவுளின் அடிமை என்பது தான் தேவதாசி என்பதன் மெய்ப்பொருள். அதனால் தான் எந்த மனிதனும் கேள்வி கேட்க முடியாத உயரத்தில் சுதந்திரக் குரலில் ஆண்டாள் பாசுரங்கள் பாடியிருக்கிறாள் என்ற கருத்துமுண்டு.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தால் ஆண்டாளுக்கு இந்தக் கருத்துச் சுதந்திரம் வாய்த்திருக்குமா என்பது ஐயப்பாடு. கடவுளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருக்கே அந்த விடுதலை கிட்டியிருக்குமோ என்ற சமூகச் சந்தேகத்தை முன்னோக்கித்தான் அந்த மேற்கோளைக் காட்டினேன். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை. ஆண்டாளை ஒரு பேராசிரியர் ஆராய்ச்சிப் பார்வையில் பார்த்த பார்வையைத்தான் நான் எடுத்தாண்டிருந்தேன்.

யார் குற்றவாளி?

தேவதாசி என்பது மிக உயர்ந்த சொல் என்பதை நிகழ்கால சமூகம் புரிந்துகொள்ளாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில்தான், பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அடிக்கோடிட்டிச் சொல்லியிருக்கிறேன். இதில் என்ன தவறு? தாசி என்பது உயர்ந்தபொருள் இல்லையென்றால் பாவேந்தர் தன் பெயரை பாரதிதாசன் என்று சூட்டிக்கொண்டிருப்பாரா? தாசன் என்பது ஆண்பால்; தாசி என்பது பெண்பால். இரண்டும் உயர்ந்த பொருள்.

பேராசிரியர் நாராயணனை தந்தி டி.வி. தொலைபேசியில் பேட்டி கண்டபோது ஆமாம். அந்த மேற்கோளை எழுதியது நான்தான் என்று அவர் பொதுவெளியில் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால் அவர் மீது குற்றம் சொல்ல முடியாது. மூலம் எழுதியவரே குற்றவாளி இல்லையென்றால் மேற்கோள் காட்டியவன் எப்படிக் குற்றவாளி ஆவான்? அதுவும் உயர்ந்த பொருளில் வழங்கப்பட்டிருக்கும்போது...

தேவதாசி

கேள்வி:-இந்த கருத்து எப்படித் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது?

பதில்:-அங்கு தான் மதத்தோடு கலந்த அரசியலும், அரசியலோடு கலந்த மதமும் வினைப்படுகின்றன. தேவதாசி என்ற சொல்லில் தேவ என்ற வார்த்தையைத் தூக்கிவிட்டு ஆண்டாளை தாசி என்று சொல்லிவிட்டார் என்று ஒரு கூட்டம் பரப்பியது. அதை வாங்கிப் பரப்பிய கூட்டம் தாசியை வேசி என்று திரித்துப் பரப்பிவிட்டது. அது திட்டமிட்ட அரசியல். என்னைப் பொதுவெளியில் புரட்டி எடுக்கிறார்கள். நான் தாங்கிக்கொள்கிறேன். அரசியல் என்பது தாக்குவது; இலக்கியம் என்பது தாங்குவது. எல்லா விஷத்தையும் நானே குடித்துக்கொள்கிறேன். என்னை ஆதரித்த தமிழ்ச் சமூகம் அமுதத்தை மட்டுமே பருகட்டும். என் சத்தியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த உயர்ந்த உள்ளங்களின் கைகளைப்பற்றிக் கண்களில் ஒற்றி நன்றி சொல்கிறேன்.

கேள்வி:-வருத்தம் தெரிவித்து இருந்தீர்களே?

பதில்:-அது மனிதப் பண்பாடு. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று சொன்னது சக மனிதர்கள் மீது நான் கொண்ட மதிப்புமிக்க நேசமாகும்.

மவுனமாக இருந்தது ஏன்?

கேள்வி:-இவ்வளவு விமர்சனங்களை தாங்கிக்கொண்டு நீங்கள் ஏன் பேசாமல் இருந்தீர்கள்?

பதில்:-எனக்காகத் தமிழ்ச்சமூகமே பேசிக்கொண்டிருந்தது. நான் ஏன் தனியாகப் பேச வேண்டும். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார், பாரதிராஜா மற்றும் அனைத்துப் படைப்பாளர்கள், ஆதரித்த அமைப்புகள், தாய்மார்கள், கலைச் சொந்தங்கள், கல்வியாளர்கள், அனைத்து ஊடகங்கள், எதிர்த்தரப்பில் இருக்கும் சில நல்ல தலைவர்கள் அத்தனை பேரும் சங்கநாதம் செய்து கொண்டிருந்தபோது நான் மட்டும் மவுனமாய் இருந்தது தானே நாகரிகம்.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன்

கேள்வி:-உங்கள் நாக்கை அறுப்பவருக்கு 10 லட்சம் தருவேன் என்று சிலர் கூறியிருக்கிறார்களே?.

பதில்:-அவர் எந்த பொருளில் சொன்னார் எந்தச் சொற்களில் சொன்னார் என்பதை அறியாமல் அதை நான் நம்பமாட்டேன். ஒரு வேளை அது உண்மையாயின் 10 லட்சம் எடுத்துக்கொண்டு நேரில் வாருங்கள். நீங்கள் கேட்ட உறுப்பை நானே தருகிறேன். சில லட்சம் செலவில் புதிய நாக்கு செய்து கொண்டு மிச்சத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்குத் தந்துவிடுவேன். அந்தப் புதிய நாக்கும் அவரைப் பாராட்டுமே தவிரப் பழிக்காது.

கேள்வி:-ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் பொதுவெளியில் இது குறித்துக் கருத்தே சொல்லவில்லையே! இத்தனைக்கும் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் என்னிரு கண்கள் என்று அண்மையில் சொன்னீர்களே!

பதில்:-கண்கள் பேசுவதில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார். 

Next Story