‘வடகொரியாவின் அணு ஏவுகணை மிரட்டல் நடக்காது’ டிரம்ப் திட்டவட்டம்


‘வடகொரியாவின் அணு ஏவுகணை மிரட்டல் நடக்காது’ டிரம்ப் திட்டவட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2017 9:00 PM GMT (Updated: 3 Jan 2017 8:09 PM GMT)

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கும், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகளுக்கும் மத்தியில், வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

வாஷிங்டன்,

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கும், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகளுக்கும் மத்தியில், வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தையொட்டி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்தார். அப்போது அவர், “அணுகுண்டுகளை ஏந்திச்சென்று, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க தொலைதூர ஏவுகணை சோதனையை வடகொரியா நெருங்கியுள்ளது. அந்த ஏவுகணையை வடிவமைப்பதற்கான முயற்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது” என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்கிறபோது அது, அமெரிக்காவையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும்.

ஆனால் வடகொரியாவின் மிரட்டல் நடக்காது என்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக கூறி உள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில், “இது நடக்காது” என குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி வடகொரியாவின் பரம எதிரியான தென்கொரியா நேற்று கருத்து தெரிவிக்கையில், “வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் முதல்முறையாக கருத்து வெளியிட்டுள்ளார். இது வடகொரியாவுக்கு தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தது. 

Next Story