பிலிப்பைன்சில் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மலேசியர்கள் 3 பேர் மீட்பு


பிலிப்பைன்சில் கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மலேசியர்கள் 3 பேர் மீட்பு
x
தினத்தந்தி 27 March 2017 8:45 PM GMT (Updated: 27 March 2017 7:47 PM GMT)

கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மலேசியாவை சேர்ந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டனர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் அபு சயீப் என்ற கிளர்ச்சியாளர்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இவர்களது முக்கிய நோக்கம் பிரிவினைவாதம் என்ற போதிலும் அதிக அளவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பிலிப்பைன்ஸ் கடல் பகுதிக்கு வரும் அண்டைநாட்டு சரக்கு கப்பல்களை வழிமறித்து கொள்ளையடிப்பதும், கப்பலில் உள்ள மாலுமிகளை கடத்தி சென்று அவர்களது உறவினர்களை மிரட்டி பிணைத்தொகை வசூலிப்பதையும் வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

குறிப்பிட்ட நாளுக்குள் தாங்கள் கேட்ட பிணைத்தொகை கிடைக்காத பட்சத்தில் கடத்திவந்தவர்களை தலையை துண்டித்து கொலை செய்துவிடுவதால் உலகின் கொடூரமான இயக்கங்களில் முக்கியமான ஒன்றாக இந்த இயக்கம் திகழ்கிறது. அங்கு இவர்களது கொட்டத்தை ஒடுக்க ராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.   

இந்த நிலையில், அங்கு ஜோலே தீவு பகுதியில் பிணைக்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவத்தினர் அங்கு விரைந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மலேசியாவை சேர்ந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டனர். இவர்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கப்பலில் இருந்தபோது கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டவர்கள் ஆவர்.

Next Story