ஆஸ்திரேலியாவை ‘டெப்பி’ புயல் தாக்கியது மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் பெருத்த சேதம்


ஆஸ்திரேலியாவை ‘டெப்பி’ புயல் தாக்கியது மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் பெருத்த சேதம்
x
தினத்தந்தி 28 March 2017 10:00 PM GMT (Updated: 28 March 2017 8:46 PM GMT)

குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது

சிட்னி,

ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியை ‘டெப்பி’ என்ற புயல் நேற்று தாக்கியது. குயின்ஸ்லாந்து பகுதியில் அமைந்துள்ள பவன், ஏர்லி கடற்கரை பகுதியில் மணிக்கு 263 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி வீசியது. 3–வது பிரிவு புயலாக வகைப்படுத்தப்பட்ட இந்த புயல் காரணமாக அங்கு இடைவிடாது, பேய் மழை பெய்தது.

ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.

வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

2011–ம் ஆண்டுக்கு பிறகு இந்த புயல்தான் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் குயின்ஸ்லாந்தில் 25 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பலத்த வேகத்துடன் சூறாவளி வீசியபோது, இடது புறத்தில் இருந்தும், வலது புறத்தில் இருந்தும் மாறிமாறி சரக்கு ரெயில்கள் அதிவேகத்தில் சென்றது போல இருந்தது என சுற்றுலா தலமான விட்சண்டே தீவை சேர்ந்த ஒருவர் கூறினார்.

இந்த புயலின் தாக்கம் குறித்து பிரதமர் மால்கம் டர்ன்புல், பாராளுமன்றத்தில் பேசுகிறபோது பேரிடர் மீட்பு திட்டத்தை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தார்.'

Next Story