அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம், ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் வடகொரியா சபதம்


அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம், ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் வடகொரியா சபதம்
x
தினத்தந்தி 25 April 2017 11:32 AM GMT (Updated: 25 April 2017 11:31 AM GMT)

டொனால்டு டிரம்ப் அனுப்பிய படைப்பிரிவு கொரிய தீபகற்பத்தை அடைந்த நிலையில் அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம் என வடகொரியா சபதமிட்டு உள்ளது.

சியோல்,


வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது. ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா கடந்த சில வாரங்களாக கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு உள்ளதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது. 

இதற்கிடையே எதிர்பாராத விதமாக வடகொரியா தொடர்பாக பேசுவதற்கு நாளை (புதன்கிழமை) அனைத்து செனட் உறுப்பினர்களும் வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்து உள்ளார். பாதுகாப்பு அரணாக அமைந்து உள்ளநிலையிலும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்தது. எந்தஒரு நேரத்திலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை தொடங்க வடகொரியா தயாராக உள்ளது என தென் கொரியா தெரிவித்தது. 

வடகொரியா மேலும் ஒரு அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருகிறது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அமெரிக்காவின் செயற்கைகோள் காண்பித்து உள்ளது. வடகொரியா நகர்வை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம் என வடகொரியா சபதமிட்டு உள்ளது. அணு ஆயுத போர் வெடிக்கும் என்றால் அனைத்து எதிரிகள் படையையும் அழிக்கப்படும் என வடகொரியா சபதமிட்டு உள்ளது. 

வடகொரியா அரசு பத்திரிக்கையான மின்ஜு ஜோசான், “எதிரிகள் மீது இரக்கமற்ற அழிவுத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என வடகொரிய ராணுவம் ஏற்கனவே அறிவித்துவிட்டது, அவர்கள் பொறுப்பற்ற முறையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள், உயிர்பிழைக்க மாட்டார்கள்,” என கூறிஉள்ளது.

அமெரிக்காவால் கற்பனை செய்யமுடியாத ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க படைகளை எங்கள் படைகளால் அழிக்க முடியும், ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் என குறிப்பிட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் பேசிய போது வடகொரியாவிற்கு எதிராக ராணுவ தாக்குதலை முன்னெடுப்பது தொடர்பாக பேசியதாக தெரியவந்து உள்ளது. உலக நாடுகளால் ஒதுக்கப்பட்ட வடகொரியாவின் நட்பு நாடான சீனாவை ஒதுங்கி நிற்க அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story