துருக்கியில் ஒரே நாள் இரவில் அமெரிக்க வாழ் மத குரு ஆதரவாளர்கள் 800 பேர் கைது


துருக்கியில் ஒரே நாள் இரவில் அமெரிக்க வாழ் மத குரு ஆதரவாளர்கள் 800 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2017 9:00 PM GMT (Updated: 26 April 2017 7:38 PM GMT)

துருக்கியில் நேற்று முன்தினம் இரவில் பெதுல்லா குலன் ஆதரவாளர்கள் என கருதப்படுகிற 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

அங்காரா,

துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15–ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். அந்தப் புரட்சியை மக்கள் ஆதரவுடன் அதிபர் எர்டோகன் முறியடித்தார்.

இந்த புரட்சிக்கு துருக்கியை சேர்ந்த அமெரிக்க வாழ் மத குரு பெதுல்லா குலன்தான் காரணம், அவர் பல்லாண்டு காலமாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பிரதமர் யில்டிரிம் குற்றம் சாட்டினார்.

புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பெதுல்லா குலன் ஆதரவாளர்கள் என கருதப்படுகிற 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் ஆயிரம் பேரை கைது செய்வதற்கு வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 803 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தலைநகர் அங்காராவுக்கு கொண்டு வரப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் துருக்கியில் அதிபர் எர்டோகன், பாராளுமன்ற ஆட்சிமுறையை அகற்றி விட்டு அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவது தொடர்பாக நடத்திய கருத்து வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை அமைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story