அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரியா தலைவர் எச்சரிக்கை


அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரியா தலைவர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2017 11:15 PM GMT (Updated: 22 Sep 2017 6:48 PM GMT)

வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவோம் என மிரட்டிய டிரம்புக்கு வடகொரியா தலைவர் ஆவேச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சியோல்,

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரித்து வரும் வடகொரியா தனது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை கைவிட மறுத்து வருகிறது. கடந்த 3-ந் தேதி கூட 6-வது முறையாக அணு ஆயுத சோதனையை அந்த நாடு மேற்கொண்டது. வடகொரியா மேற்கொண்ட சோதனைகளிலேயே இதுதான் மிகப்பெரிய சோதனையாகவும் கருதப்படுகிறது.

வடகொரியாவின் இந்த அடாவடித்தனத்தால் மிகுந்த கோபம் அடைந்துள்ள அமெரிக்கா, வடகொரியாவுக்கு போர் மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை, ஒரு தற்கொலை திட்டத்தின் ராக்கெட் மனிதன் என்று கிண்டல் செய்ததுடன், அந்த நாட்டை முற்றிலும் அழித்து விடுவோம் எனவும் மிரட்டினார்.

டிரம்பின் நேரடியான இந்த போர் மிரட்டல் வடகொரியாவுக்கு ஆத்திரத்தை அளித்துள்ளது. இதற்கு பதிலடியாக டிரம்ப் ஒரு ‘பைத்தியக்காரர்’ என கிண்டல் செய்துள்ள கிம் ஜாங் அன், வரலாற்றிலேயே இதுவரைக்கும் கண்டிராத மோசமான பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டிரம்பின் கருத்துகள் அனைத்தும் வரலாற்றிலேயே மிகவும் மூர்க்கமான ஒரு போர் அறிவிப்பு ஆகும். வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் அனைத்தும் சரியான பாதையில் செல்கிறது என்பதையே டிரம்பின் ஐ.நா. உரை வெளிப்படுத்துகிறது. இந்த கருத்துகளுக்கு உரிய விலையை அவர் கொடுத்தாக வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

வடகொரியா தலைவர் ஒருவர் இவ்வாறு நேரடியாக சூளுரைத்து இருப்பது இதுவே முதல் முறை என கருதப்படுகிறது. டிரம்புடன் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வரும் அவர் எத்தகையான பதில் நடவடிக்கை? எடுக்கப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
எனினும் ஹைட்ரஜன் குண்டு ஒன்றை பசிபிக் பெருங்கடலில் செலுத்தி சோதனை நடத்தக்கூடும் என வடகொரிய வெளியுறவு மந்திரி ரி யாங் கோ தெரிவித்து உள்ளார். ஆனாலும் கிம் ஜாங் அன்னின் எண்ணம் குறித்து சரியாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே வடகொரியாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை டிரம்ப் அறிவித்து உள்ளார். அதன்படி வடகொரியாவின் கப்பல் மற்றும் வர்த்தக துறைகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடைகள் மூலம் நாசகார ஆயுதங்கள் தயாரிப்பதற்கான வடகொரியாவின் பொருளாதார வசதிகள் தடுக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக வடகொரியாவுடன் மேற்கொண்டு வரும் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீன வங்கிகளுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story