உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 18 Nov 2017 10:45 PM GMT (Updated: 18 Nov 2017 7:59 PM GMT)

* ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் படையினருடன் நடந்த மோதலில் 5 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* சீனாவின் சிறப்பு தூதர் சாங் டாவ், வடகொரியா சென்று அந்த நாட்டின் உயர் அதிகாரி சோ ரியாங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, சீனா கருத்து தெரிவிக்கையில் வடகொரியாவுடனான பாரம்பரிய நட்பு, இரு நாட்டு மக்களுக்கு மதிப்பு மிக்க சொத்து என்று கூறியது. அதே நேரத்தில், வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை தவிர்ப்பது பற்றி பேசப்பட்டதா என்பது பற்றி தகவல் இல்லை.

* அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தகுதியானவர்களின் பட்டியலில் மேலும் 5 பேரது பெயர்களை அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் சேர்த்துள்ளார். அவர்கள் அப்பீல் கோர்ட்டு நீதிபதிகள் பிரெட் கவனாஹ், கெவின் நியூசம், அமி கோனி பேரட், ஜார்ஜியா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிரிட் கிராண்ட், ஓக்லஹாமா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேட்ரிக் விரிக் ஆவர்.

* அர்ஜெண்டினாவின் நீர்மூழ்கி கப்பல், 44 சிப்பந்திகளுடன் மாயமானது. அதை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

* ஈராக்கில் நினிவேவுக்கு தெற்கே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆயுத தாக்குதல் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Next Story