ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா தேர்வு


ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நங்கக்வா தேர்வு
x
தினத்தந்தி 22 Nov 2017 10:30 PM GMT (Updated: 22 Nov 2017 8:01 PM GMT)

ஜிம்பாப்வேயின் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முன்னாள் துணை அதிபரான எம்மர்சன் நங்கக்வா புதிய அதிபராகிறார்.

ஹராரே,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 1980-ம் ஆண்டு முதல் ஜானு-பி.எப். கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சி சார்பில் முதலில் பிரதமராகவும், 1987-க்கு பிறகு அதிபராகவும் ஜிம்பாப்வேயை ஆண்டு வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). துணை அதிபராக எம்மர்சன் நங்கக்வா (75) பதவி வகித்து வந்தார்.

சுமார் 37 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த முகாபே, தனக்குப்பின் தனது மனைவி கிரேஸ் முகாபேவை ஆட்சியில் அமர்த்தும் நோக்கில் காய்களை நகர்த்தினார். எனவே கிரேசுக்கு போட்டியாளராக கருதப்படும் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வாவை கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பதவியில் இருந்து நீக்கினார்.

இதனால் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. முகாபேக்கு எதிராக ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் முகாபே மற்றும் கிரேசுக்கு ஆதரவளிக்காதவர்களுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடப்பட்டன. இதனால் தனது பாதுகாப்பை கருதி எம்மர்சன் நங்கக்வா நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்த களேபரங்களால் அரசு மீது அதிருப்தி அதிகரித்து வந்த நிலையில், ராணுவம் அதிரடியாக செயல்பட்டு கடந்த 15-ந்தேதி முகாபேயின் அதிகாரங்களை பறித்து, அவரை வீட்டுக்காவலில் வைத்தது. அவரிடம், பதவி விலகுமாறு ராணுவமும், எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்திய நிலையில், மக்களும் அதிபருக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடினர்.

மேலும் முகாபேயிடம் இருந்த கட்சித்தலைவர் பதவியும் கடந்த 19-ந்தேதி பறிக்கப்பட்ட நிலையில், அவரை பதவி நீக்குவதற்கான கண்டன தீர்மானம் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்துக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு தன் மீதான எதிர்ப்பு அதிகரித்து வந்ததால், முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவல் பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், அவரது ராஜினாமா கடிதத்தையும் சபாநாயகர் ஜேக்கப் முடன்டா, எம்.பி.க்களுக்கு வாசித்துக்காட்டினார். இதன்மூலம் ஜிம்பாப்வேயில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது.

முகாபேயின் ராஜினாமாவை தொடர்ந்து முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வா, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அவர் நேற்று நாடு திரும்பினார். அவர் நாளை( வெள்ளிக்கிழமை) பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிபர் மாற்றம் மூலம் ஜிம்பாப்வேயில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

முகாபேயின் ராஜினாமாவை எதிர்க்கட்சியினரும், நாட்டு மக்களும் கொண்டாடி வருகின்றனர். ஜிம்பாப்வே தெருக்களில் ஆயிரக்கணக்கில் கூடிவரும் அவர்கள் எம்மர்சன் நங்கக்வா மற்றும் ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவென்கா ஆகியோருக்கு ஆதரவாக துண்டுபிர சுரங்களை வினியோகித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story