ஆடிப்பெருவிழா: கடவுள் வேடமணிந்து வந்த பக்தர்களின் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி


ஆடிப்பெருவிழா: கடவுள் வேடமணிந்து வந்த பக்தர்களின் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Aug 2017 11:00 PM GMT (Updated: 11 Aug 2017 10:05 PM GMT)

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடிப்பெருவிழாவில் கடவுள் வேடமணிந்து வந்த பக்தர்களின் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பராசக்தி வண்டிவேடிக்கை விழாக்குழு சார்பில் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இதில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் பக்தர்கள் பலர் கடவுள் வேடமணிந்து வந்தனர். சிவசக்தி நண்பர்கள் குழு சார்பில் திருப்பரங்குன்றத்தில் முருகன், வள்ளி, தெய்வானை வீரபாகு ஆகியோருடன் காட்சி தருவது போல வலம் வந்தனர். எந்திரங்கள் மூலம் இயங்கும் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் ஆகிய சாமி சிலைகள் வலம் வந்தன. இதில் சிவன், பார்வதி எழுந்து நின்று அருள்பாலிப்பதுடன், சிவன் தலையில் இருக்கும் கங்கை மூலம் தண்ணீர் வெளியேறி பொதுமக்கள் மீது தெளிக்கப்படுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி வேடமணிந்து காட்சியளிக்கப்பட்டது. பச்சகாளி, பவளகாளி, நீலக்காளி ஆகிய வேடமணிந்தும், லட்சுமி, நரசிம்மனுடன் பிரகலாதன் உள்ளிட்ட சாமி வேடமணிந்தும் பக்தர்கள் உலா வந்தனர். இந்த வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். முடிவில் சிறந்த முறையில் அலங்கரித்து வண்டி வேடிக்கை நடத்திய குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி அம்மாபேட்டை காந்தி மைதானத்தில் செங்குந்தர் உடற்பயிற்சி சங்கம் சார்பில் வீர விளையாட்டுகள் நடைபெற்றது. இதில் சிலம்பாட்டம், நெருப்பு வளையத்தில் பாய்தல், மார்பின் மீது உரல் வைத்து மாவு இடித்தல், மார்பின் மீது கல் வைத்து சம்மட்டியால் உடைத்தல் உள்ளிட்ட சாகச விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

இதை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story