தொடர் விடுமுறை எதிரொலி: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


தொடர் விடுமுறை எதிரொலி: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கிலும், சனி பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையையொட்டி நேற்று அதிகாலை முதலே சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று சனீஸ்வர பகவானுக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள் பாலித்தார். முன்னதாக கோவிலின் புனித தீர்த்தமான நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனிதநீராடி அங்குள்ள கலித்தீர்த்த விநாயகரை வழிபட்டு சிதறு தேங்காய் உடைத்தனர்.

பக்தர்களின் வருகையால் திருநள்ளாறு முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story