மாடிப்படி ஏற உதவும் ‘மேசை லிப்ட்’ அமைப்பு


மாடிப்படி ஏற உதவும் ‘மேசை லிப்ட்’ அமைப்பு
x
தினத்தந்தி 6 Jan 2017 10:15 PM GMT (Updated: 6 Jan 2017 1:45 PM GMT)

வீடுகளில் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு செல்வதற்கு வழக்கமாக படிக்கட்டுகள் பயன்படுத்தப்படும். படிகளில் அனைவராலும் சுலபமாக ஏறுவது என்பதில் இருக்கும் சங்கடங்கள் காரணமாக மின் தூக்கி எனப்படும் ‘லிப்ட்’ முறையானது மேல் நாடுகளிலிருந்து இங்கே அறிமுகமானது. சாதாரணமாக

வீடுகளில் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு செல்வதற்கு வழக்கமாக படிக்கட்டுகள் பயன்படுத்தப்படும். படிகளில் அனைவராலும் சுலபமாக ஏறுவது என்பதில் இருக்கும் சங்கடங்கள் காரணமாக மின் தூக்கி எனப்படும் ‘லிப்ட்’ முறையானது மேல் நாடுகளிலிருந்து இங்கே அறிமுகமானது. சாதாரணமாக இருவர் செல்லும் ‘லிப்ட்’ முதல் பதினைந்து அல்லது இருபது பேர் வரையிலும் செல்லும் வகையிலான ‘லிப்ட்’ வகைகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவ்வகையிலான ஒரு புதிய கண்டுபிடிப்பு பற்றி இங்கே காணலாம்.

‘ஸ்டேர்ஸ் லிப்ட்’ அமைப்பு

ஒருவர் மட்டும் அமரும் விதத்தில் இருக்கும் மேசை போன்ற அமைப்பில் தானியங்கி எந்திரத்தை பொருத்தி, அதில் அமரக்கூடியவர் சுலபமாக இயக்குவதன் வாயிலாக, ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு செல்ல உதவும் சிறிய வகை இயந்திர அமைப்பு இதுவாகும். பொதுவாக, ஒரு சில இடங்களில் ‘லிப்ட்’ அமைப்புகளை பொருத்தக்கூடிய கட்டமைப்பு வசதி அல்லது இட வசதி போன்றவை இருப்பதில்லை. அது போன்ற இடங்களில் மாடிப்படிகள் ஏற உதவும் வகையிலும், சுலபமாக இயக்கும் வகையிலும் இந்த ‘சேர் லிப்ட்’ வடிவமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ‘பெல்ட்’ மற்றும் கச்சிதமாக நிறுத்துவதற்கான ‘சென்சார்’ இயக்கமும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இதை உபயோகப்படுத்தாத சமயங்களில் அழகாக மடித்தும் வைத்து கொள்ளலாம்.

செயல்படும் விதம்

அமர்வதற்கு நல்ல ‘கு‌ஷன்’ வசதியுடன் கூடிய இருக்கையானது, வலுவான அலுமினியம் அல்லது உலோக தண்டவாளத்துடன் ஏறும் வகையில் அல்லது இறங்கும் வகையில் தக்க ‘பேரிங்’ அமைப்பு மூலம் இணைக்கப்பட்டிருக்கும். அந்த உலோக தண்டவாளமானது மாடியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதியோடு நேராகவோ அல்லது வளைவுகள் கொண்டதாகவோ இணைக்கப்பட்டு இருக்கும். அதில் அமர்பவர் தமது கைகளை வைப்பதற்காக உள்ள ‘ஹேண்ட் ரெஸ்ட்’ பகுதியில் இருக்கும் சிறிய ‘லிவரை’ வேண்டியவாறு இயக்கி மேலே ஏறலாம் அல்லது கீழே இறங்கலாம். சுமாராக 150 கிலோ முதல் 225 கிலோ எடை வரையில் பளுவை தாங்கி இயங்கும் விதத்தில் இவை தயாரிக்கப்படுகின்றன.  

இதன் வகைகள்

பொதுவாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட விதத்திற்கேற்ப இயங்கும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. அவை மொத்தம் மூன்று வகைகளாக இருக்கின்றன. முதலாவது நேராக ஏறக்கூடியது. இரண்டாவது படிகளின் வளைவு தன்மைக்கேற்ப வளைந்து ஏறக்கூடியது. மூன்றாவது வீட்டுக்கு உட்புற உபயோகம் அல்லது வெளிப்புற உபயோகத்துக்கு ஏற்ப அமைத்துக்கொள்வது. பொதுவாக இவ்வகை தானியங்கி படியேறும் அமைப்புகள் அவற்றின் விலை காரணமாக அனைவராலும் பயன்படுத்த இயலாததாக உள்ளது.

நேராக ஏறும் அமைப்பு

இவ்வகை ‘ஸ்டேர் லிப்ட்’ அமர்ந்து செல்லும்படி வடிவமைக்கப்பட்டதாக இருந்தாலும், முட்டிகளை மடக்கி அமர்வதற்கு முடியாமல் இருக்கும் வயதானவர்களுக்கும் வசதியாக நின்றபடியே செல்லக்கூடிய வசதிகளுடனும் தயாரிக்கப்படுகின்றன. ‘பேட்டரி’ மூலமாக செயல்படுவதால் மின்சார பாதிப்புகள் காரணமாக பாதியில் நின்று விடும் என்ற சங்கடங்கள் இதில் இல்லை. பேட்டரி தனது இயக்கத்திற்கான மின் அளவில் குறைந்து விடும் சமயத்தில் அதை ‘சார்ஜ்’ செய்து கொள்ள இயலும்.

வளைவாக ஏறும் அமைப்பு

கட்டுமானங்களில் இருக்கும் எல்லாவிதமான படிக்கட்டுகளும் நேராக ஏறுவது போன்றே அமைக்கப்பட்டிருக்காது. வளைவாக இருக்கும் படிகளில் ஏறுவதற்காக வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டேர் லிப்டானது’ அதற்கு தகுந்தாற்போல உள்ள தண்டவாளங்களில் சரியாக ஏறவோ அல்லது இறங்கவோ ஏற்ற வகையில் இருக்கும்.

வெளிப்புற பயன்பாடு

வீடுகளுக்குள் பயன்படுத்துவதை விடவும் சிறிது மாறுபட்ட வகையில் தயாரிக்கப்பட்ட இவை சூரிய வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் பாதிக்காத வகையில் தயாரிக்கப்படுகின்றன. நமது நாட்டில் அவ்வளவாக பிரபலமாகாத இவ்வகை ‘தானியங்கி படியேறும் மேசைகள்’ மேலை நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Next Story