கட்டமைப்பின் பட்ஜெட்டை தீர்மானிக்கும் நான்கு காரணிகள்


கட்டமைப்பின்  பட்ஜெட்டை  தீர்மானிக்கும் நான்கு  காரணிகள்
x
தினத்தந்தி 10 Feb 2017 8:30 PM GMT (Updated: 10 Feb 2017 10:58 AM GMT)

கட்டுமான வேலைகளை தொடங்கும்போது திட்டமிடப்பட்ட பட்ஜெட் தொகைக்கும், பணிகள் முடிவடைந்த நிலையில் செய்யப்பட்ட மொத்த செலவு தொகைக்கும் உள்ள வேறுபாட்டை பலரும் உணர்ந்திருப்பார்கள்.

ட்டுமான வேலைகளை தொடங்கும்போது திட்டமிடப்பட்ட பட்ஜெட் தொகைக்கும், பணிகள் முடிவடைந்த நிலையில் செய்யப்பட்ட மொத்த செலவு தொகைக்கும் உள்ள வேறுபாட்டை பலரும் உணர்ந்திருப்பார்கள். பல்வேறு தவிர்க்க இயலாத காரணங்களால் புதிய செலவுகள் ஏற்படுவதென்பது கட்டுமான துறையில் வழக்கமான ஒன்று என்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். கட்டுமான வேலையை செய்பவர் தனி நபராக இருந்தாலும், ஒரு கட்டுமான நிறுவனமாக இருந்தாலும் பட்ஜெட்டில் துண்டு விழுவதை தவிர்க்க முடிவதில்லை.

நான்கு வகைகள்

அதனால் கட்டுமான பணிகளுக்கான பட்ஜெட் போடும் சமயத்தில் ஒட்டு மொத்த செலவாக நிர்ணயம் செய்யும் தொகையில், சுமார் 15 சதவிகிதம் அதிகமாக ஆகலாம் என்பது வல்லுனர்களது கருத்தாகும். செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அவற்றின் வகைகளை அறிந்து கொள்வது அவசியம் என்ற நிலையில், கட்டுமான அமைப்புகளின் செலவினங்களை நான்கு வகைகளாக வல்லுனர்கள் பிரித்துக்காட்டுகிறார்கள். அவற்றை பற்றிய தகவல்களை காணலாம்.

1) கட்டமைப்பின் மொத்த அளவு

‘சிறுக கட்டி பெருக வாழ்..’ என்ற பழமொழி நமக்கு மறைமுகமாக தெரிவிக்கும் செய்தி சிக்கனம் என்ற தொழில்நுட்ப  அணுகுமுறையையாகும். சிக்கன நடவடிக்கையை கடைப்பிடிப்பது என்பது தொடக்கத்திலேயே கவனிக்க வேண்டும் என்பதால் கட்டமைப்பின் அளவுகள் பற்றி தெளிவான, மாற்றங்களற்ற முடிவுகள் கையாளப்படுவது முக்கியமாகும்.

அளவுகளில் செய்யப்படும் மாற்றம்தான் செலவுகளை பெரியதாக மாற்றுகிறது என்பது கட்டிட வடிவமைப்பாளர்களது அனுபவமாக உள்ளது. அதனால் சிறியதாக யோசித்து, கச்சிதமாக பணிகளை முடிப்பதுதான் செலவுகளை கட்டுக்குள் வைக்கும்.

2) பணிகளை செய்வது யார்..?

தமக்கான கட்டமைப்பை தானே முன்னின்று செய்யும்போது செலவுகளை அனைத்து நிலையிலும் கவனித்து கட்டுப்படுத்த வாய்ப்புகள் இருக்கும். ‘டர்ன்–கீ’ முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது அவ்வளவாக நடைமுறையில் இல்லை என்ற நிலையில், கட்டுமான வேலைகளை தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனங்கள், மொத்த ஒப்பந்த அடிப்படையில்தான் மேற்கொள்கிறார்கள். இன்றைய சூழலில் அது பல வகைகளில் நன்மை தருவதாக இருந்தாலும், எதிர்பாராத செலவுகள் ஏற்படும் தருணங்களில் இரு தரப்பும் பகிர்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கும்.

3) கட்டுமான மூலப்பொருள்கள்

மூன்றாவதாக நாம் கவனிக்க வேண்டிய அம்சம், கட்டுமான பணிகளில் நம்மால் உபயோகிக்கப்படும் மூலப்பொருட்கள் ஆகும். சாதாரண குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரையிலான அனைத்து பொருட்களும் பல்வேறு தரங்களில் சந்தையில் கிடைக்கின்றன.

இந்த நிலையில், மணலில் தொடங்கி கிரகப்பிரவேசத்திற்கான பூசணிக்காய் வரையில் இருக்கும் விலை வித்தியாசங்கள் அனைவரும் அறிந்ததே.
சற்றே கவனம் எடுத்துக்கொண்டால் கட்டுமான பொருட்கள் வாங்குவதில் உள்ள செலவுகளில் பலவற்றையும் தவிர்க்கலாம்.

4) கட்டுமான தொழில்நுட்பங்கள்

ஒரு கட்டமைப்பை உருவாக்கும்போது எவ்வித தொழில்நுட்ப அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகிறது என்பதை சார்ந்தும் ‘பட்ஜெட்’ தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது, அஸ்திவார அமைப்புகள், சுவர் அமைக்க பயன்படும் செங்கல், ஏ.ஏ.சி அல்லது ‘புரோத்தம் பிரிக்ஸ்’ வகை கற்கள், மாடிப்படிகள் அமைப்பு, சிமெண்டின் தரம், கட்டுமான பணியின்போது கையாளப்படும் கட்டமைப்பு அணுகுமுறைகள், உள்கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மரம் உள்ளிட்ட உலோக சாதனங்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்தும் விதம் ஆகியவற்றாலும் ‘பட்ஜெட் தொகையில்’ குறிப்பிட்ட அளவு சேமிக்க இயலும்.

Next Story