‘பர்னிச்சர்’ பொருட்களில் புகுந்திருக்கும் புதுமை


‘பர்னிச்சர்’  பொருட்களில்  புகுந்திருக்கும்  புதுமை
x
தினத்தந்தி 24 Feb 2017 11:30 PM GMT (Updated: 24 Feb 2017 10:02 AM GMT)

புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் துறைகளில் கட்டுமானத்துறை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் துறைகளில் கட்டுமானத்துறை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. காலம்காலமாக பயன்படுத்தி வந்த மூலப்பொருட்களுக்கு மாற்றாக பல்வேறு மாற்று பொருட்கள் இன்றைய காலகட்டத்தில் அறிமுகமாகியிருக்கின்றன. மாற்றங்கள் என்பது காலத்தின் கட்டாயம் என்பது அனைத்து துறைகளிலும் நிலவி வரும் சூழலாகும். அந்த வரிசையில் பர்னிச்சர் தயாரிப்புகளில் உள்ள மாற்று முறை தொழில் நுட்பமாக ‘அக்ரிலிக்’ பொருட்களை பயன்படுத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது.

மாற்று முறை

ஆதி காலம் முதலாக மரங்களால் செய்யப்பட்ட கதவு, ஜன்னல், அலமாரி, மேஜை மற்றும் சேர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக கான்கிரீட் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட மேஜைகளும் சேர்களும் பயன்பாட்டுக்கு வந்தன. அத்தகைய வரிசையில் தற்போது ‘அக்ரிலிக்’ வகை பர்னிச்சர் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை ‘பிளாஸ்டிக்’ பர்னிச்சர் வகைகளுக்கு தக்க மாற்றாக இருப்பதாக கருதலாம்.

‘பாலிமர்’ மூலப்பொருள்

‘அக்ரிலிக்’ என்பது ‘பாலிமரை’ மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பொருளாகும். 1940–களில் அமெரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘அக்ரிலிக்’ முதலில், இழைகளாக உருவாக்கப்பட்டு ஆடை வகைகளில் பயன்படுத்தப்பட்டது. அதன் பயன்கள் மற்றும் உறுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறைகளின் உட்புறத்தை வடிவமைக்க பயன்படும் ‘ரெடிமேடு’ சுவராகவும் பயன்படுத்தலாம் என்று அறியப்பட்டது. அந்த பயன்பாடு மேலும் வளர்ச்சி அடைந்து தற்போது ‘பர்னிச்சர்’ வகைகள் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

வலிமையானது

கண்ணாடி போன்ற பளபளப்பும், ஒளியை சுலபமாக கடத்தக்கூடிய தன்மையும் கொண்ட ‘அக்ரிலிக்’ பர்னிச்சர் பொருட்கள் ‘பைபரை’ விடவும் வலிமை பெற்றது என்று அறியப்பட்டிருக்கிறது. மிக எளிதாக அவற்றை வேண்டிய அளவுகளில் துண்டித்தும் பயன்படுத்த இயலும் என்பதால் அதன் பயன்பாடு இன்னும் அதிகமாகியுள்ளது. ஹால்களில் பயன்படுத்துன் ‘காபி டேபிள்’, உணவு அறையில் பயன்படுத்தப்படும் மேசை, சேர்கள் ஆகிய தண்ணீர் புழங்கும் பொருட்கள் ‘அக்ரிலிக்’ வகையாக இருக்கும் பட்சத்தில் பராமரிக்க எளிதாக இருக்கும்.

ஒளி ஊடுருவும்

கண்ணாடி போல் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதால் வண்ண மீன்கள் துள்ளி விளையாடும் தண்ணீர் தொட்டிகள் தயாரிக்க இந்த தொழில்நுட்பம், தற்போது அதிகமாக பயன்படுகிறது. கண்ணாடி போன்று தோற்றம் தந்தாலும் எளிதாக உடைந்துவிடும் என்ற பயம் இல்லை. காரணம், அதன் முலக்கூறுகள் வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ளதால் பர்னிச்சர் பொருட்கள் தவிரவும், பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கவும் ‘அக்ரிலிக்’ பயன்படுத்தப்படுகிறது.

மரங்களுக்கு மாற்று

சோபா, சாப்பாட்டு மேஜை, இருக்கைகள், அலமாரிகள், ஊஞ்சல் பலவித பொருட்களை ‘அக்ரிலிக்’ கொண்டு தயார் செய்யப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன. மரங்களால் செய்யப்பட்ட பர்னிச்சர் பொருட்கள் மரங்களின் தரத்துக்கு ஏற்ப விலைகளில் வித்தியாசம் இருக்கும். மேலும், மரங்கள் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை மற்றும் கைக்கு அடக்கமான விலை ஆகிய காரணங்களால் இத்தகைய பொருட்களுக்கு வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.      

மறு சுழற்சி

மரத்தால் செய்யப்பட்ட பர்னிச்சர்களுடன் ஒப்பிட்டால் ‘அக்ரிலிக்’ வகை பொருட்கள் பயன்படுத்துவதற்கு எளிதானவை. மேலும், அவை சுற்றுப்புற சூழ்நிலைக்கு உகந்ததாகவும், மறு சுழற்சிக்கு உட்பட்டதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழிற்சாலைகளில் முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில் சந்தையில் கிடைப்பதால், நேர்த்தியான தயாரிப்பாக இருக்கும். இறக்குமதி செய்யப்படும் நிலை மாறி, இப்போது நமது நாட்டிலேயே ‘அக்ரிலிக்’ வகை பர்னிச்சர்கள் தயாரிக்கப்படுகின்றன.

Next Story